திருவாசகம் பாட கட்டணம் வசூல்; திராவிட மாடலின் ஜிஸ்யா வரி
திருவாசகம் பாட கட்டணம் வசூல்; திராவிட மாடலின் ஜிஸ்யா வரி
ADDED : அக் 20, 2025 06:17 AM

சென்னை: தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில், திருவாசகம் பாட, கட்டணம் செலுத்த வேண்டும் என, வலியுறுத்தியதற்கு, ஹிந்து தமிழர் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அக்கட்சி தலைவர், ராம.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், கடந்த 25 ஆண்டுகளாக, சிவ பக்தர்கள், கயிலை கிருஷ்ணன் தலைமையில், திருவாசகம் முற்றோதல் பாடி வருகின்றனர். இக்கோவிலின் செயல் அலுவலர் பொன்னி, 'தன் அனுமதி இல்லாமல், எதுவும் நடக்கக் கூடாது' என, கோவில் உரிமையாளர் போல் நடந்து கொள்கிறார்.
ஹிந்து சமய அறநிலையத் துறை சட்ட விதிகளுக்கு முரணாக, அதிகார மமதையில், சிவனடியார்களை அவர் மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. திருவாசக முற்றோதல் பாட கோவிலில் அனுமதி வாங்க வேண்டும்; நன்கொடை என்ற பெயரில், கட்டணம் செலுத்த வேண்டும் என்பது அடாவடியான செயல்.
கோவில் உபரிநிதியில், 'தேவாரம் பரப்ப வேண்டும்' என்பது சட்டம். ஆனால், கோவிலில் திருவாசகம் முற்றோதல் செய்வதற்கே, 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது, திராவிட மாடலின் ஜிஸ்யா வரி விதிப்பு.
சிவனடியார்களை, அவமரியாதையாக பேசிய கோவில் செயல் அலுவலர் மீது அறநிலையத்துறை கமிஷனர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனல், காசிவிஸ்வநார் கோவிலில், இந்து தமிழர் கட்சி சார்பில், மிகப் பெரிய திருவாசக முற்றோதல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.