மின் இணைப்பு வழங்க லஞ்சம்; இன்ஜினியருக்கு 4 ஆண்டு சிறை
மின் இணைப்பு வழங்க லஞ்சம்; இன்ஜினியருக்கு 4 ஆண்டு சிறை
ADDED : மே 13, 2025 06:59 AM

துாத்துக்குடி: மின் இணைப்பு வழங்க, 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைதான மின்வாரிய இளநிலை இன்ஜினியருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
துாத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியை சேர்ந்த திருப்பதி,60, வல்லநாடு மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 2010ல் இளநிலை இன்ஜினியராக வேலைபார்த்து வந்தார். வல்லநாட்டில் உலர் சலவையகம் அமைக்க மின் இணைப்பு கேட்டு திருநெல்வேலி மகாராஜ நகரை சேர்ந்த சிவபாரதி என்பவர் விண்ணப்பித்தார். விரைந்து பரிசீலித்து மின் இணைப்பு வழங்க 35,000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என திருப்பதி கேட்டுள்ளார்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் அவர் புகார் அளித்தார். முதல்கட்டமாக சிவபாரதியிடம் இருந்து 2010 மே 7ல் 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது திருப்பதியை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
போலீசாரை கண்டதும், பணத்தை வாயில்போட்டு விழுங்கிய திருப்பதி, சிகிச்சைக்கு பின், சிறையில் அடைக்கப்பட்டார். பின் ஜாமீனில் வெளியே வந்த திருப்பதி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு முன் திருப்பதி ஓய்வு பெற்ற நிலையில், வழக்கு நிலுவையில் இருந்ததால் அவருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படாமல் இருந்தது.
வழக்கின் விசாரணை துாத்துக்குடி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி வசீத்குமார் குற்றம்சாட்டப்பட்ட திருப்பதிக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.