UPDATED : ஜன 12, 2026 02:25 PM
ADDED : ஜன 05, 2026 06:07 AM

லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, 'லஞ்சம் - என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் 'தினமலர்' இதழில் வெளியாகும். வாசகரின் இந்த வார உள்ளக்குமுறல் இதோ:
திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, கருவலுாரைச் சேர்ந்த, 50 வயது பெண்ணின் மனக்குமுறல்:
கருவலுாரில், எனது அம்மாவுக்கு சொந்தமான வீட்டில், அவருடன் கூட்டுக்குடும்பமாக வசிக்கிறேன். எனது அம்மாவிற்கு மருத்துவச் செலவுக்கு பணம் தேவைப்பட்டது. வீட்டையும் மராமத்து பணி செய்ய வேண்டியிருந்தது. வங்கியில் கடன் பெற முடிவு செய்தோம். கடன் பெறுவதற்கு எனது பெயரில் வீடு இருக்க வேண்டும் என்றனர். அதனால் தனியாரிடம் 10 லட்சம் கடன் வாங்கி, தாய்க்கு 8 லட்சம் ரூபாய் கொடுத்தேன். பின்னர் வீட்டை எனது பெயருக்கு மாற்றினேன்.
இதற்கான பத்திரப்பதிவு, கடந்த 2024, செப்டம்பரில் அவிநாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. பத்திர எழுத்தாளர் 'முத்திரைத்தாள், பதிவு கட்டணமாக 67 ஆயிரம் கேட்டார்; கொடுத்தோம். தவிர, அங்குள்ள அதிகாரி, கைரேகை பதிவு செய்யும் ஊழியர், போட்டோ எடுக்கும் தற்காலிக ஊழியர் என, பலருக்கும் லஞ்சம் தர வேண்டும்' எனக் கூறி, 5,000 ரூபாய் கேட்டார். வேறு வழியில்லாமல் கொடுத்தழ வேண்டியிருந்தது; போராடினால் இவர்களிடம் வெற்றி பெற முடியுமா?
கவுரவமான அரசுப்பணியில் இருந்தும் இவ்வாறு எதற்காக, கடமையாற்ற லஞ்சம் பிடுங்குகிறார்கள் என்றே தெரியவில்லை. கடந்த காலத்தைவிட, தற்போது லஞ்சம் அதிகம். தற்போது இருப்பதை விடவும் வருங்காலத்தில் இப்பிரச்னை அதிகமாக இருக்கும். வருங்கால சந்ததிகள், தாங்கள் வாங்கும் ஊதியத்தில், பெரும் தொகையினை செலவிட்டால் மட்டுமே அரசு அலுவலகங்களில் வேலை நடக்கும் என்ற அவல நிலை ஏற்படப்போகிறது என்பது மட்டும் நிச்சயம்.
தொடரும்...

