பணமழை இல்லாத இடைத்தேர்தல்; தேர்தல் கமிஷன் தீவிர நெருக்கடி
பணமழை இல்லாத இடைத்தேர்தல்; தேர்தல் கமிஷன் தீவிர நெருக்கடி
ADDED : செப் 23, 2026 05:42 AM

- நமது நிருபர் -
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில், தேர்தல் கமிஷன் நெருக்கடியால், பணமழை, பரிசு மழை எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில், வரும் அக்., 6ல் இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் வென்ற அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைந்ததால், இடைத்தேர்தல் நடக்கிறது.
வழக்கமாக, இடைத்தேர்தல் என்றாலே பண மழை, பரிசு மழை கொட்டும். இந்த இடைத்தேர்தலில் அதற்கான அறிகுறியே, இதுவரை தென்படவில்லை. இரு தொகுதிகளிலும் 18 பறக்கும் படைகளை, தேர்தல் கமிஷன் இறக்கி உள்ளது.
த.வெ.க., - தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில், வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் தனித்தனியே, ரகசியமாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வங்கியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல், யார் பணம் எடுத்தாலும், தேர்தல் கமிஷனுக்கு விபரம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. த.வெ.க., வேட்பாளர்கள் மரகதம், சத்யபாமா ஆகியோர், சிறப்பு கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சந்தேகத்திற்குரிய இடங்களில், பணப்பட்டுவாடா நடக்கிறதா என்பது 'ட்ரோன்' உதவியுடன், தேர்தல் கமிஷனால் கண்காணிக்கப்படுகிறது. தேர்தல் கமிஷனின் நெருக்கடியால், இடைத்தேர்தலில் பணத்தை வாரி இறைக்கும் கட்சி பிரமுகர்கள், அடக்கி வாசிக்கின்றனர்.
வாக்காளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு, எந்த கட்சியுமே பணம், பரிசுப் பொருட்கள் கொடுக்க வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால், தலைவர்களின் தேர்தல் பிரசாரம் களை கட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர் விஜய், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்ற தலைவவர்கள், பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளனர். பணமழை இல்லாத நிலையில், இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு அதிகரிக்குமா அல்லது குறையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
