நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய முடியுமா? அடுத்தது என்ன?
நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய முடியுமா? அடுத்தது என்ன?
UPDATED : டிச 10, 2025 07:29 AM
ADDED : டிச 10, 2025 07:28 AM

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதனை, பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை பார்லிமென்டில் கொண்டுவர வலியுறுத்தி, தி.மு.க., - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 107 எம்.பி.,க்கள் கையழுத்திட்ட நோட்டீஸ், லோக்சபா சபாநாயகரிடம் தரப்பட்டு உள்ளது.
அடுத்தது என்ன?
சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்வது என்பது, அவ்வளவு சுலபமானது அல்ல. ஆளுங்கட்சியே நினைத்தாலும், எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்ய முடியாது. இதற்கென மிகப்பெரிய நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக, அரசியலமைப்பு சட்ட நடைமுறைகளை அவசியம் பின்பற்றியாக வேண்டும்.
அந்த நீதிபதி வழங்கிய ஒரு குறிப்பிட்ட தீர்ப்பை மட்டும் கொண்டு, தவறான செயல்பாடு என்ற அரசியலமைப்பு சட்ட விதியை மேற்கோள் காட்டிவிட முடியாது. 'இம்பீச்மென்ட்' எனப்படும் பதவி நீக்க தீர்மானத்தை, லோக்சபா, ராஜ்யசபா என, எந்த சபையிலும் கொண்டு வரலாம். லோக்சபா எனில் குறைந்தது, 100 எம்.பி.,க்கள், ராஜ்யசபா எனில், 50 எம்.பி.,க்கள் ஆதரவு கையெழுத்துக்கள், அதற்கான நோட்டீசில் இருக்க வேண்டும்.
லோக்சபா சபாநாயகரிடமோ, ராஜ்யசபா தலைவரிடமோ இந்த நோட்டீசை தரலாம். இருப்பினும், நோட்டீசை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பது, அந்த இருவரின் தனியுரிமையாகும். ஒருவேளை நோட்டீசை ஏற்றுக்கொண்டால், நிபுணர் குழு அமைக்கப்படும். அதாவது, சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகள் மற்றும் சட்ட நிபுணர் என, மூன்று பேர் இடம்பெறும் குழு அமைக்கப்படும்.
விசாரணை அமைப்பை போல செயல்படும் இந்த குழு, ஆதாரங்கள், ஆவணங்கள் என அனைத்தையும் ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட நீதிபதியிடமும் விளக்கம் கேட்டு, அறிக்கை தயார் செய்து சமர்பிக்கும். அதில், குற்றச்சாட்டுகள் உண்மை தான் என்பது ஊர்ஜிதமானால், இறுதி கட்டம் துவங்கும். அதன்படி, பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் சபைகளில் கொண்டு வரப்பட்டு, விவாதம் துவங்கும்.
முடிவில், ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, தீர்மானம் நிறைவேற வேண்டும். அதுவும், மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.,க்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற வேண்டும். இறுதியாக, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு, அவர் தான் நீதிபதியை பதவி நீக்கம் செய்யக்கூடிய அறிவிப்பை வெளியிடுவார்.
- நமது டில்லி நிருபர் -

