ADDED : ஆக 22, 2026 05:39 AM

எம். எல்.ஏ.,க்களுக்கும் கார் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. சர்ச்சையாகி உள்ள இந்த அறிவிப்பு குறித்து, கோவை மக்கள் என்ன சொல்கின்றனர்?
பொதுப்பணித்துறை செய்யணும்
அரசு நிதியில் கார் கொடுப்பது தேவையற்றது; வங்கி கடன் வாங்கி தரலாம். அரசு கார் என்றால் எம்.எல்.ஏ. பதவி முடிந்ததும் காரை அரசிடம் ஒப்படைத்து விட வேண்டும். பராமரிப்பு செலவாக நிதி வழங்காமல், கார் பராமரிப்பு வேலைகளை அரசு துறைகளே கவனிக்கலாம். போக்குவரத்து துறை மூலமாக செய்ய முடியும். உதவியாளர் நிதியும் ஒதுக்க வேண்டியதில்லை.
-தண்டபாணி, சுங்கம்
கடன்சுமை அதிகரிக்கும்
10 லட்சம் கோடி கடன் சுமை உள்ளதால், நிதி ஆதாரத்தை சரி செய்த பிறகு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றனர். இப்போது எம்.எல்.ஏ.க்களுக்கு கார் உள்ளிட்ட சலுகைகள் அறிவித்துள்ளனர். ஒரு மாதத்தில் நிதி நிலை சரியாகி விட்டதா. கடன் அதிகரித்து, மக்கள் வரிப்பணம் தான் வீணாகும். லட்ச ரூபாய் சம்பளம் வாங்குபவரால் கார் வாங்க முடியாதா?
-- ராஜ்குமார், சிங்காநல்லுார்
வங்கிக்கடனில் வாங்கலாம்
எம்.எல்.ஏக்கள் மாதம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள். சம்பளம் தவிர இதர படிகள் என்று செல்லும் இடமெல்லாம் சலுகை வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கார் கொடுப்பது அவசியமற்றது. சம்பள ஆவணங்களை காட்டி வங்கியில் கடன் பெற்று, கடன் அடைக்கும் வகையில் கார் வாங்க ஏற்பாடு செய்யலாம். அப்போதுதான் சாமானிய மக்களின் சுமை தெரியும்.
-சுப்ரமணியம், இடையர்பாளையம்
சிக்கன நடவடிக்கை அவசியம்
தமிழகம் ரூ.10 லட்சம் கோடி கடனில் இருக்கிறது என சொல்லும் அரசு, சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டாமா? அரசு மட்டுமல்லாமல், அனைவரும் சிக்கனத்தை கடைபிடிப்பது அவசியம். வறுமை நிலையில் கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து; 5 அல்லது 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு அரசு சார்பில், எலெக்ட்ரிக் சைக்கிள் வழங்க திட்டமிடலாம்.
--கணேசன், வடவள்ளி
நல்ல விஷயம் தான்
எம்.எல்.ஏ. என்றால் பல இடங்களுக்கு சென்று பிரச்னைகளை ஆராயவேண்டும். மக்களை சந்திக்க வேண்டும். கார், உதவியாளர் ஊதியம் என்று வசதிகளை செய்து கொடுத்தால், புதிதாக வந்தவர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள். ஆனால், அரசு வாகனமாக கொடுக்காமல், வட்டி இல்லா கடனாக கொடுத்து, பெட்ரோல் அலவன்ஸ் ஒதுக்கி இருக்கலாம்.
-ஜெகன்னாத், ஈச்சனாரி
இல்லாதவருக்கு கொடுக்கலாம்
எல்லா எம்.எல்.ஏ.களுக்கும் கார் கொடுக்க அவசியமில்லை. யார் யாருக்கு கார் வாங்க வசதி இல்லையோ அவர்களுக்கு கொடுக்கலாம். த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் புதியவர்கள். பதவி சுகம் பார்க்காதவர்கள். அவர்களை ஆடம்பர வாழ்க்கைக்கு தள்ளிவிடக் கூடாது. கார் இல்லாதவர்களுக்கு மட்டும் கொடுத்தால், அரசு மீது விமர்சனம் வராது.
-தர்மராஜ், கரடிமடை
