போட்டியிட தயங்கும் வேட்பாளர்கள்; பழனிசாமிக்கு புது நெருக்கடி
போட்டியிட தயங்கும் வேட்பாளர்கள்; பழனிசாமிக்கு புது நெருக்கடி
ADDED : மார் 16, 2026 06:02 AM

- நமது நிருபர் -
தேர்தல் செலவுகளுக்கு அச்சப்பட்டு, பழனிசாமி தேர்வு செய்திருந்த வேட்பாளர்களில், 19 பேர் பின்வாங்கியது, அ.தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தே.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை, பழனிசாமி ஏற்கனவே தேர்வு செய்துவிட்டார். மார்ச் 18ம் தேதி, பழனிசாமி உள்ளிட்ட 5 அல்லது 6 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
அதைத்தொடர்ந்து, தொகுதி பங்கீடை சுமுகமாக முடித்து, இரண்டாம் கட்ட பட்டியலை, வெளியிட, பழனிசாமி திட்டமிட்டு இருந்தார். ஆனால், அந்த பட்டியலில் விருதுநகர், மதுரை, கடலுார், திருப்பூர், திருச்சி, திருவண்ணாமலை, சென்னை ஆகிய மாவட்டங்களில் தேர்வாகி இருந்த, 19 பேர் திடீரென, நாங்கள் போட்டியிடவில்லை என, பழனிசாமியிடம் தெரிவித்துள்ளனர்.
விஜய் கூட்டணிக்கு வரவில்லையென்றால், நான்கு முனை போட்டியாக, தேர்தல் களம் மாறும். இதில் வெற்றி பெற, அதிக செலவுகளை செய்யும் சூழல் உருவாகி உள்ளது. ஆனால், செலவுகளில் ஒரு பகுதியை ஏற்க, தலைமை மறுத்து விட்டது. இதனால், மொத்த செலவும், வேட்பாளர்கள் தலையில் விழுந்து விட்டது.
இதற்கு பயந்து தான், போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக அவர்கள் தெரிவித்து விட்டனர். இதனால், மாற்று வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடியில் பழனிசாமி உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

