ஆண்டுக்கு 15 சிலிண்டருக்கு மேல் கிடையாதா?: புது கட்டுப்பாட்டால் வாடிக்கையாளர்கள் குழப்பம்!
ஆண்டுக்கு 15 சிலிண்டருக்கு மேல் கிடையாதா?: புது கட்டுப்பாட்டால் வாடிக்கையாளர்கள் குழப்பம்!
ADDED : மார் 19, 2025 04:15 AM

சென்னை: ஆண்டுக்கு, 15 சமையல் காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தியவர்கள், அதற்கு மேல் பதிவு செய்யும் போது, 'அன்புள்ள வாடிக்கையாளரே, இதை பதிவு செய்ய முடியாது; ஏனெனில் ஏற்கனவே ஆண்டு ஒதுக்கீடான, 213 கிலோவை பயன்படுத்தி விட்டீர்கள்' என, இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், எஸ்.எம்.எஸ்., தகவல் செல்கிறது.
வீடுகளுக்கு ஒரு இணைப்பு, இரண்டு இணைப்புகளில் காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. இரு இணைப்பு வைத்திருப்போர், சிலிண்டர் காலியாவதற்கு முன்பே, மற்றொன்றுக்கு பதிவு செய்து வாங்கலாம். சிலிண்டர் எடுத்து வரும் போது, காலி சிலிண்டரை வழங்க வேண்டும். ஒரு இணைப்பு வைத்திருப்பவர்கள், சிலிண்டர் தீர்ந்த பிறகு தான் வாங்க முடியும். மத்திய அரசு ஆண்டுக்கு, 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குகிறது.
இந்நிலையில், ஆண்டுக்கு, 15 சிலிண்டர்கள் பயன்படுத்திவர்கள், அதற்கு மேல் சிலிண்டருக்கு பதிவு செய்யும் போது, 'அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் சமையல் காஸ் சிலிண்டருக்கான பதிவை ஏற்க முடியாது. 'ஏனெனில் ஏற்கனவே ஆண்டு ஒதுக்கீட்டான, 213 கிலோவை பயன்படுத்தி விட்டீர்கள்' என, இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பப்படுகிறது. இதனால், அந்த எண்ணிக்கைக்கு சிலிண்டர் பயன்படுத்தியவர்களுக்கு, அதற்கு மேல் வாங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தமிழக முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் சடகோபன் கூறியதாவது: ஆண்டுக்கு, 12 சிலிண்டர்களுக்கு மானியமும் வழங்கலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் சிலிண்டருக்கு மானியம் வழங்க வேண்டாம். ஆண்டுக்கு எத்தனை சிலிண்டர் பயன்படுத்த வேண்டும் என்ற விபரம் தெரியவில்லை.
திடீரென, 15 சிலிண்டர்கள் பயன்படுத்திவர்களுக்கு, அதற்கு மேல் பயன்படுத்த முடியாது என்று கூறுவது, எந்த வகையில் நியாயம்? ஒவ்வொரு முறை சிலிண்டர் வழங்கும் போது, அது, அந்தாண்டின் எத்தனையாவது சிலிண்டர் என்ற விபரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியன் ஆயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒருவருக்கு ஆண்டுக்கு, 15 சிலிண்டர்கள் வரை வழங்கப்படும். அதில், 12க்கு மானியம் கிடைக்கும். அனுமதிக்கப்பட்ட சிலிண்டர் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஏனெனில், வீட்டிற்கு தான் பயன்படுத்துகிறாரா அல்லது முறைகேடாக பயன்படுத்துகிறாரா என்பதை கண்டறியவே இந்த நடவடிக்கை.
எனவே, 15 சிலிண்டர் பயன்படுத்தியவர்கள், அதற்கு மேல் வாங்க வேண்டும் எனில், அதற்கான காரணத்தை விளக்கி, காஸ் ஏஜென்சியில் கடிதம் கொடுத்தால், கூடுதல் சிலிண்டர் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.