இனி தொடவே முடியாதோ... உச்சத்தில் ஏறி ஜொலிக்கும் தங்கத்தை!
இனி தொடவே முடியாதோ... உச்சத்தில் ஏறி ஜொலிக்கும் தங்கத்தை!
UPDATED : அக் 09, 2025 07:50 AM
ADDED : அக் 09, 2025 12:20 AM

கோவையில் நேற்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் 11,290 ரூபாய்க்கும், ஒரு சவரன் 90,320 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஜி.எஸ்.டி. செய்கூலி, சேதாரம் சேர்த்தால், ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை கடந்து விட்டது.
இதுகுறித்து, மக்கள் என்ன சொல்கிறார்கள்?
மீனாகுமாரி, இல்லத்தரசி, ராம்நகர்: தங்கம் வாங்குவதை இனி நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய் என்பது மலைப்பாக இருக்கிறது. முன்பெல்லாம் மாதந்தோறும் சீட்டு போட்டு சிறுக சிறுக சேமிப்பேன். இப்போது, அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. என்னதான் தீர்வு என புரியவில்லை.
வைதேகி, முன்னாள் வங்கி அலுவலர், காந்திபுரம்: என் மகன், மகள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. தப்பித்துக்கொண்டேன் என்றே கூற வேண்டும்; தற்போது தங்கத்தை பற்றி நினைப்பதில்லை. இறுதியாக, ஏழு ஆண்டுகள் முன் மகள் திருமணத்துக்கு 24,000 ரூபாய்க்கு ஒரு சவரன் வாங்கினேன். திருமணத்துக்கு 50-100 சவரன் போட வேண்டும் என்கிற பழக்கத்தை மாற்றி, மேற்கத்திய நாடுகள் போல் மாற வேண்டியதுதான்.
தட்சிணாமூர்த்தி, ஆட்டோ டிரைவர், தொண்டமுத்துார்: தீபாவளி சமயத்தில் பலருக்கும் போனஸ் கிடைக்கும். அத்தொகையை வைத்து ஒரு சவரன், இரண்டு சவரன் என சேர்க்கும் பழக்கம் எங்கள் குடும்பத்தில் இருந்தது. இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது. போனஸ் தொகையை வைத்து ஒரு சவரன் கூட வாங்குவது சிரமம். எங்களை போன்றவர்கள் தங்கத்தை மறந்து விட வேண்டும் போலிருக்கிறது.
திவ்யா, இல்லத்தரசி, காந்திபுரம்: கல்லுாரியில் படிக்கும் பெண் குழந்தைகள் வைத்திருக்கும் வீடுகளில், தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை இடிபோல் உள்ளது. குறைந்தபட்சம் 10 சவரன் என்றாலும் இனி போட முடியுமா. இந்த அளவுக்கு விலை உயருமென எதிர்பார்க்கவில்லை.
ரமேஷ், வாட்ச்மேன், ஊட்டி: நம் சமூகத்தில் திருமணம் என்றாலே தங்கத்தை பிரிக்க முடியாது. இனி, பிள்ளைகளுக்கு எப்படி தங்கம் போடுவது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எங்களை போன்ற குடும்பங்கள் தங்கம் வாங்குவது சாத்தியமில்லை என்றாகி விட்டது.
கிருஷ்ணமூர்த்தி, தள்ளுவண்டி தொழில், ராம்நகர்: மண், பொன் இரண்டும் சிறுக சிறுக சேமிக்க வேண்டும் என்று பழக்கப்பட்டவன். தங்கத்தை இனி சிறுக சேமிக்கவும் பெரிதாக பணம் வேண்டுமே. வேறு வழியில்லை; முடிந்தவரை சேர்த்து வைக்க வேண்டும்.
ஸ்ரீமதி, தனியார் நிறுவனம், மதுக்கரை: முன்பெல்லாம் மாதந்தோறும் சீட்டு போட்டு ஒரு ஆண்டுக்கு ஒரு சவரன் என்று தீபாவளி சமயத்தில் தங்க நகை சேர்த்து வந்தேன். தற்போது, தவணை முறையில் சீட்டு போட்டாலும் தங்கம் வாங்கும் அளவுக்கு சேர்க்க முடிவதில்லை. தங்கம் விலை உயர்வுக்கு முடிவே இல்லையா என்று தோன்றுகிறது.
லீலா, சீனியர் சிட்டிசன், காந்திபுரம்: என் மகளுக்கு திருமணம் நடக்கும்போது, ஒரு சவரன் 6000 ரூபாயாக இருந்தது. தற்போது, 11 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இருக்கும் தங்கத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். புதிதாக தங்கம் வாங்குவது இனி சாத்தியமில்லை.
கலைச்செல்வி, குடும்ப தலைவி.
தற்போதைய தங்கத்தின் விலையை பார்த்தால், கடுகு மணி அளவுக்கு கூட வாங்க முடியாத நிலை உள்ளது. பொன் வைக்க வேண்டிய இடத்தில் இனி பூவைத்தான் வைக்க வேண்டும் போல உள்ளது.
முகிலன், குறுந்தொழில் முனைவோர்.
தங்கம் என்பது நடுத்தர குடும்பங்களின் சேமிப்பாக உள்ளது. அவசரத் தேவைக்கு வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்று வந்தோம். தற்போதைய விலையேற்றத்தால், தங்கத்தை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தங்கம் விலையை குறைக்க அரசு முன்வர வேண்டும்.
கருப்புசாமி, சலூன் கடை உரிமையாளர்.
எங்களைப் போன்ற ஏழை, எளிய மக்களுக்கு தங்கம் வாங்குவது இனி கனவில் மட்டுமே நடக்கும்.
இந்த விலை உயர்வு, அடித்தட்டு மக்களின் தங்கம் வாங்கும் எண்ணத்தையே மாற்றி விட்டது. வீட்டில் தங்கம் வைத்திருப்பது ஆபத்தில் முடியும் என்ற எண்ணம், பொதுமக்களிடையே வலுத்து உள்ளது.
------------------------ லலிதாம்பிகை, பேன்சி ஸ்டோர் உரிமையாளர்
இனி பெண்கள் ரோட்டில் நகை அணிந்து செல்வது, ஆபத்தானது. நிலத்தில் முதலீடு செய்தால் அந்த பயம் இல்லை என்பதால், பலர் நிலத்தில் முதலீடு செய்ய முன் வரலாம்.
கார்த்திகாயினி, பொதுத்துறை நிறுவன ஊழியர்.
எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மத்திய, மாநில அரசுகள் தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நியாயமான விலையில் தங்கம் கிடைக்கச் செய்ய வேண்டும். வரியில்லாமல் தங்கம் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்.
சண்முகநாயகி, இன்சூரன்ஸ் முகவர்.
இதுவரை கேள்விப்படாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்க நகைகள் வாங்க எளிதில் வங்கிகள் கடன் வழங்க வேண்டும். தங்கம் பதுக்கி விற்பனை செய்வதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுத்தர மக்களுக்கு குறைந்த அளவு தங்கமாவது, நியாயமான விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும்.
செல்வராஜ், வியாபாரி.
ங்கத்தின் விலை இவ்வாறு உயர்ந்து கொண்டே சென்றால், பாமர மக்களுக்கு வாங்க முடியாத நிலை ஏற்படும். நடுத்தர மக்கள் கடன் பெற்று தங்கத்தை வாங்கி, பெண்களுக்கு சீதனமாக கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த விலை உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
- நமது நிருபர்கள் -