'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என பாடிய பாரதியார் பல்கலையில் ஜாதி பாகுபாடு!
'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என பாடிய பாரதியார் பல்கலையில் ஜாதி பாகுபாடு!
ADDED : அக் 15, 2024 05:25 AM

கோவை : கோவை பாரதியார் பல்கலையில், 39வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது; கவர்னர் ரவி பட்டங்களை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வ.புதுப்பட்டியை சேர்ந்த மாணவர் பிரகாஷ்; பிஎச்.டி., பட்டம் பெற வந்த இவர், பட்டம் பெறும் முன், மேடையிலேயே புகார் மனு ஒன்றை, தமிழக கவர்னரிடம் வழங்கினார். மனுவை படித்து பார்த்த கவர்னர், உதவியாளரிடம் வழங்கினார். மனுவில், பாரதியார் பல்கலையில் பிஎச்.டி., மாணவர்கள், வழிகாட்டிகளால் அடையும் துன்பங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து, பிரகாஷ் கூறியதாவது: ஆராய்ச்சி மாணவர்களுக்கு உள்ள பிரச்னைகளை, யாரிடம் கூறுவது என தெரியாததால், கவர்னரிடம் மனுவாக கொடுத்தேன். பொது இடத்தில், அவரிடம் மனு அளித்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆராய்ச்சி மாணவர்களை வழிகாட்டிகள், வீட்டு வேலைகள் செய்யவும், சாக்கடையை சரி செய்யவும், குழந்தைகளை பராமரிக்கவும், வங்கி கணக்குகளை பராமரிக்கவும் அறிவுறுத்துகின்றனர்.
அவர்களிடம் பட்டம் பெற, நாய் போல வேலை செய்ய வேண்டியுள்ளது. பல்கலையில் உள்ள இரு ஆதிதிராவிடர் விடுதிகளை பராமரிப்பது இல்லை. பராமரிப்புக்கு, ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அது எங்கே செல்கிறது என்றே தெரியவில்லை.
'வைவா'வின் போது, ஆராய்ச்சி மாணவர்களிடம் சிலர், 50,000 முதல் 100,000 ரூபாய் வரை கேட்கின்றனர். பல்கலையில் உள்ள இரு மைதானங்களில் பல்கலை மாணவர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் விளையாட அனுமதிப்பதில்லை. அதேநேரம், தனியாருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதன் வாயிலாகவும் பணம் பார்க்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக விளையாட்டு தினம் நடத்தவில்லை. ஆனால், அதற்கு பணம் மட்டும் பெறுகின்றனர். பல்கலையில் ஜாதி பாகுபாடு அதிகம் உள்ளது. என் புகார்கள் மீது, கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பட்டமளிப்பு விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், உயர்கல்வித் துறை கூடுதல் தலைமை செயலர் கோபால் உள்ளிட்ட பலர் முன்னிலையில், மாணவர் புகார் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவர் புகார் குறித்து, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியனிடம் கேட்டபோது, “முழுமையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். தொடர்ந்து, மாணவன் தெரிவித்த விடுதியையும், அங்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.