சமூக வலைதளங்களில் ஜாதி போர்: கிடுக்கிப்பிடி போடுமா நெல்லை போலீஸ்?
சமூக வலைதளங்களில் ஜாதி போர்: கிடுக்கிப்பிடி போடுமா நெல்லை போலீஸ்?
ADDED : டிச 22, 2024 01:49 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் 1995களில் ஏற்பட்ட ஜாதி கலவரம், 2000 ஆண்டுகளில் குறைந்தது. சில ஆண்டுகளாக மீண்டும் ஜாதி மோதல் எண்ணங்கள் துளிர் விட்டு வருகிறது.
கோபாலசமுத்திரம் மேலச்செவலில் ஐந்து ஆண்டுகளாக இரு சமூக இளைஞர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். இதுவரை ஏழு கொலைகள் நடந்துள்ளன.
திருநெல்வேலியில் 2023 ஆக., 13ல் கொலை செய்யப்பட்ட கீழநத்தம் ராஜாமணி கொலைக்கு பழிவாங்க, நேற்று முன்தினம் திருநெல்வேலி கோர்ட் முன்பாக மாயாண்டி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸாப் போன்றவற்றில் ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சாட்டியும், பழி வாங்கும் நோக்கிலும் வீடியோக்களையும், படங்களையும் பதிவிடுகின்றனர்.
மாற்று சமூகங்களை சேர்ந்தவர்களின் படங்களை வெளியிட்டு, 'விரைவில் தலைகள் உருளும்' என, எச்சரிக்கை விடுக்கின்றனர். கொலை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை சினிமா ஹீரோக்களை போல சித்தரித்து வீடியோ வெளியிடுகின்றனர்.
திருநெல்வேலி என்றாலே தாங்கள் தான் என, ஒவ்வொரு சமுதாயத்தினரும் வீரம் காட்டி வன்முறை ரீதியான பதிவுகளை இடுகின்றனர்.
இத்தகைய வீடியோக்கள், இன்ஸ்டாகிராம் பதிவுகள் அதிகளவில் பகிரப்படுகின்றன. இவை பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே மேலும் விரோதத்தை வளர்க்கிறது.
திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி மாவட்ட கிராமங்களில் பள்ளி கல்லுாரி மாணவர்கள் கைகளில் ஜாதி வர்ண கயிறுகளை கட்டி வந்தனர். கிராமங்கள் தோறும் மின் கம்பங்கள், பொது இடங்களில் ஜாதி வண்ணங்களின் பெயின்ட் அடித்தனர்.
கோவில் கொடை விழாக்கள், ஜாதி நிகழ்வுகளில், அரிவாள், ஆயுதங்கள் படமிட்ட பனியன், டி-ஷர்ட் அணிந்து வந்தனர். குலசேகரப்பட்டினம், திருச்செந்துார் போன்ற கோவில்களுக்கு குழுவாக வரும் இளைஞர்களும் ஜாதி ரீதியான பனியன்களை அணிந்து வந்தனர்.
இவை குறித்து திருநெல்வேலி மாவட்ட போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து தற்போது குறைந்துள்ளது. குறிப்பாக கிராமங்களில் மின்கம்பங்களில் ஜாதி ரீதியான பெயின்ட் அடிப்பது தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட போலீசாரே அதை முன் நின்று அழித்து வருகின்றனர். ஆனால், மொபைல் போன்களின் புழக்கத்தால் சமூக வலைத்தளங்களில் பொது இடங்களில் பாட்டு போடுவது, பஸ்களில் பயணிக்கும் போது ஜாதி ரீதியான பாடல்களை ஒலிக்க விடுவது போன்றவை தற்போது மீண்டும் மோதலை ஏற்படுத்துகிறது.
திருநெல்வேலி சீவலப்பேரி அருகே பொட்டலைச் சேர்ந்த வள்ளிமுத்து, 24, என்ற வாலிபர் இன்ஸ்டாகிராமில் இரு ஜாதியினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக நேற்று கைது செய்யப்பட்டார். இதுகுறித்து, திருநெல்வேலி எஸ்.பி., சிலம்பரசன் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இப்படியான கைது நடவடிக்கைகள் எப்போதாவது நடந்தாலும், பெரும்பாலான பதிவுகளை போலீசார் கண்காணிப்பதோ, அப்படியே கவனத்திற்கு வந்தாலும், கண்டுகொள்வதோ கிடையாது. இதற்கு, போலீஸ் அதிகாரிகளும் ஜாதி ரீதியாக செயல்படுவது ஒரு காரணமாக உள்ளது.
திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் ஜாதி மோதல்களை கட்டுப்படுத்த, முக்கிய ஜாதிகளின் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., நிலைகளில் தென் மாவட்டங்களில் பணிபுரியக் கூடாது என, முன்பு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், தற்போது அந்த உத்தரவு கடைபிடிக்கப்படவில்லை.
ஒரு ஜாதிய கொலை நடந்தால், அதில் உள்ள குற்றவாளிகளை கைது செய்யவும், அவர்களிடம் சுமூகமாக பேசவும் அந்த ஜாதி அதிகாரிகளையே பயன்படுத்துகின்றனர்.
இதனால் சில போலீஸ் அதிகாரிகளே அந்தந்த ஜாதி பிரிவுகளின் தலைவர்கள் போல செயல்படுகின்றனர்.
எனவே, தென் மாவட்டங்களில் மீண்டும் ஜாதி மோதலை தடுக்க, சமூக வலைதள பதிவுகளை கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், ஜாதி ரீதியாக செயல்படும் போலீஸ் அதிகாரிகளை களையெடுக்கவும் உயர் போலீஸ் அதிகாரிகள் முன்வர வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.