'சந்திரயான் - 5' திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி: 25-0 கிலோ 'ரோவர்' வாகனத்தை அனுப்ப திட்டம்
'சந்திரயான் - 5' திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி: 25-0 கிலோ 'ரோவர்' வாகனத்தை அனுப்ப திட்டம்
ADDED : மார் 18, 2025 04:51 AM

“நிலவை ஆய்வு செய்வதற்காக, 'சந்திரயான் - 5' விண்கலம் அனுப்பும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 'சந்திரயான் - 3' திட்டத்தில், 25 கிலோ எடையுள்ள, 'ரோவர்' எனப்படும், நிலவில் மேற்பரப்பில் பயணம் செய்து ஆய்வு செய்யும் இயந்திரம் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் - 5' திட்டத்தில், 250 கிலோ எடையுள்ள ரோவர் வாகனம் அனுப்பப்பட உள்ளது,” என, இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நிலவை ஆய்வு செய்வதற்காக, 2008ல், 'சந்திரயான் - 1' விண்கலம் அனுப்பப்பட்டது. இது, நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்தது. அதைத் தொடர்ந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக, 2019ல், 'சந்திரயான் - 2' விண்கலம் அனுப்பப்பட்டது; 98 சதவீதம் வெற்றி என்ற நிலையில், கடைசி கட்டத்தில் நிலவில் தரையிறங்க முடியாமல் போனது. அதே நேரத்தில் இந்த விண்கலம், நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்தது.
இதன் தொடர்ச்சியாக, இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலம், நிலவின் தென்பகுதியில், 2023 ஆக., 23ல் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் வாயிலாக நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்த நாடுகளில், அமெரிக்கா, சீனா, முந்தைய சோவியத் யூனியனுக்கு அடுத்ததாக, நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
சந்திரயான் - 3 திட்டத்தில், 'பிரஜ்ஞான்' என பெயரிடப்பட்ட ரோவர் வாகனம் அனுப்பப்பட்டது. இது, 25 கிலோ எடையுள்ளது. இது, நிலவின் மேற்பரப்பில் பயணம் செய்து தகவல்களை சேகரித்தது.
இதன் அடுத்தகட்டமாக, சந்திரயான் - 4 செயற்கைக்கோளை 2027ல் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சந்திரயான் - 5 திட்டத்துக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. ஆசிய நாடான ஜப்பானுடன் இணைந்து, இதில் ஈடுபட உள்ளோம். இந்த திட்டத்தின் கீழ், 250 கிலோ எடையுள்ள ரோவர் வாகனத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான் திட்டம்' வீனஸ் எனப்படும், வெள்ளி கோளை ஆய்வு செய்வது போன்ற திட்டங்கள் அடுத்தடுத்து நடக்க உள்ளன. வரும், 2035ல் விண்வெளியில் இந்தியாவுக்கு என, தனியாக விண்வெளி ஆய்வு மையம் அமைப்பது; 2045க்குள் நிலவுக்கு இந்தியர்களை அனுப்புவது போன்ற திட்டங்களையும் இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது. இவ்வாறு நாராயணன் கூறினார்.
- நமது நிருபர் -