முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் தேதி மாற்றம்?
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் தேதி மாற்றம்?
ADDED : ஆக 06, 2024 03:58 AM

சென்னை: தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, இம்மாதம் 22ம் தேதி, அவர் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது அவர் 27ம் தேதி இரவு அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. 15 நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருக்கும் வகையில், முதல்வரின் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அப்படிப்பட்ட நிகழ்வுகள் தன்னுடைய பயணத்தின் போது நடந்தால் மட்டுமே, அமெரிக்க பயணத்துக்கு வெற்றி கிடைக்கும் என்றும் முதல்வர் தீர்க்கமாக உள்ளார். தன்னுடைய இந்த விருப்பத்தை, தொழில் துறை அமைச்சர் ராஜாவிடம் முதல்வர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்.
அதற்கேற்ப, சுந்தர் பிச்சை உள்ளிட்ட அமெரிக்காவின் பிரபலமான தொழில் அதிபர்கள் சந்திப்புக்கு நேரம் குறிப்பதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களாலேயே, முதல்வர் அமெரிக்கப் பயணம், ஒரு சில நாட்கள் தள்ளிப் போய் இருக்கிறது என, முதல்வர் அலுவலக வட்டாரங்கள் கூறின.
இன்னும் பழுக்கவில்லை:
லோக்சபா தேர்தலுக்கு முன்பே, அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என, தி.மு.க., மாவட்டச்செயலர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். அதை கட்சி தலைமை ஏற்றிருந்தால், வாரிசு அரசியல் பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும்; வெற்றியை பாதிக்கும் என்பதால், அந்த தீர்மானம் கிடப்பில் போடப்பட்டது.
அதேநேரம் கட்சியிலும், ஆட்சி நிர்வாகத்திலும் முக்கியத்துவம் தரும் வகையில், ஒருங்கிணைப்பு குழுவில் மூத்த அமைச்சர்களுடன் உதயநிதியும் இடம்பெற்றுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் முதல்வருக்கு அடுத்த நிலையில், தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்தார்.
எதிர்பார்ப்பு
தேர்தல் வெற்றிக்கு பின், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என, இளைஞரணி நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஆனால், சனாதனம் விவகாரம் தொடர்பான வழக்குகளும், அவற்றில் முன் ஜாமின் பெற வேண்டிய நெருக்கடி நிலையும் ஏற்பட்டதால், உதயநிதியின் பதவி உயர்வில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், 15 நாள் பயணமாக, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளார். வரும் 27ல், அவர் புறப்படக்கூடும் என கூறப்படுகிறது. அதற்கு முன்னர், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு தரப்படும் என, கோட்டை வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
மறுப்பு
முதல்வர் வெளிநாடு செல்வதற்கு ஒரு வாரம் முன், அதாவது 23ம் தேதியில், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அது நடக்காமல் போனால், முதல்வர் சென்னை திரும்பிய பின்னரே மாற்றம் செய்யப்படக்கூடும் என்றும் ஆளுங்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் தன் தொகுதியான கொளத்துாரில் நேற்று அரசு பணிகளை, முதல்வர் ஆய்வு செய்தார்.
அப்போது, துணை முதல்வர் பதவி குறித்து, அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ''உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது; ஆனால், பழுக்கவில்லை,'' என்றார். இவ்விவகாரத்தில், எந்த உறுதியான பதிலையும் தெரிவிக்க முதல்வர் மறுத்து விட்டார்.