'காங்., மாவட்ட தலைவர்கள் டிச., 9ல் மாற்றம் உறுதி'
'காங்., மாவட்ட தலைவர்கள் டிச., 9ல் மாற்றம் உறுதி'
ADDED : நவ 24, 2025 01:41 AM

சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் கட்சியின் 'சங்கத்தன் அபியான்' திட்டம் தமிழகத்தில் துவக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிர்வாகிகள் அடங்கிய குழு, மாவட்டங்களுக்கு சென்று, மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, மாவட்டத்தின் நிலைமை, வரும் சட்டசபை தேர்தலில், மாவட்டத்தில் செய்ய வேண்டியது குறித்து பேசுவர். அவர்கள் கூறும் கருத்துக்கள் அடிப்படையில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் நியமனம் குறித்து அறிக்கை அளிப்பர்.
வரும் 9ம் தேதிக்குள், அனைத்து மாவட்டத் தலைவர்களும் நியமனம் செய்யப்படுவர். கூட்டணி குறித்து பேசுவதற்காக அமைக்கப்பட்டுள்ள, ஐந்து பேர் அடங்கிய குழு, மூத்த தலைவர்களுடன், ஆலோசனை நடத்தியது, எங்களின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை அறிந்து, கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக, ஆலோசனை நடத்தப்பட்டது. பீஹார் தேர்தல் வெற்றி, தமிழகத்தில் எடுபடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
செல்வப்பெருந்தகை கூறுகையில், ''ஐவர் குழு ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரசுக்கு செல்வாக்கான தொகுதிகள், எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேசப்பட்டது. இக்குழு தி.மு.க., சார்பில் அமைக்கப்படும் தொகுதி பங்கீட்டு குழுவுடன் விரைவில் பேச்சு நடத்தும்' என்றார்.

