தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்: சிதம்பரம், இளங்கோவன் புறக்கணிப்பு
தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்: சிதம்பரம், இளங்கோவன் புறக்கணிப்பு
UPDATED : ஜன 09, 2024 03:14 AM
ADDED : ஜன 09, 2024 02:15 AM

தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியில், 15 தொகுதிகளில் போட்டியிட, தமிழக காங்கிரஸ் விரும்புகிறது. தமிழக காங்கிரஸ் தேர்தல் குழுவால் அடையாளம் காணப்பட்ட, 15 தொகுதிகளின் பட்டியல், அக்கட்சியின் மத்திய தேர்தல் குழுவிடம் தரப்பட்டு உள்ளது.
அந்த பட்டியல், டில்லியில் இருந்து சென்னை அறிவாலயத்திற்கு, அனுப்பப்பட்டுள்ளது. புதிய வரவை காரணம் காட்டி, காங்கிரஸ் தொகுதிகளை குறைக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் மேலிடத்திடம் கூறப்பட்டுள்ளது.
அதில் கமல் கட்சியை மட்டும் சேர்க்க, காங்கிரஸ் மேலிடம் விருப்பம் தெரிவித்துள்ளது. பா.ம.க., தேர்தலுக்கு பின் நிலைப்பாட்டை மாற்றக்கூடும் என்ற அச்சத்தையும், அக்கட்சி தி.மு.க.,விடம் கூறியிருக்கிறது.
இந்நிலையில், வரும் 19, 20 ஆகிய இரு நாட்களில், தமிழகம், புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து, இது தொடர்பான கருத்துக்களை, அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் கேட்க உள்ளார்.
அதன்பின், மூத்த தலைவர்கள் முகுல் வாஸ்னிக் அல்லது அசோக் கெலாட் ஆகிய இருவரில் ஒருவர், முதல்வர் ஸ்டாலினை சந்திக்க, சென்னை வர உள்ளதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம், லோக்சபா தொகுதிகளுக்கு காங்கிரஸ் சார்பில் மேலிட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில், 39 பொறுப்பாளர்களில், மாநில தலைவர் அழகிரி, மாணிக் தாகூர் எம்.பி.,யின் ஆதரவாளர்களே அதிக இடம் பெற்றுள்ளனர்.
மூத்த தலைவர்கள் சிதம்பரம், திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், இளங்கோவன், தங்கபாலு ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டு உள்ளனர்.
இதனால், கட்சிக்குள் பெரும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது
- நமது நிருபர் -.