பள்ளிகள் அருகில் பறிமுதலாகும் சிகரெட்; மீண்டும் புழக்கத்துக்கு வருவது எப்படி?
பள்ளிகள் அருகில் பறிமுதலாகும் சிகரெட்; மீண்டும் புழக்கத்துக்கு வருவது எப்படி?
ADDED : ஆக 14, 2025 05:02 AM

சென்னை: பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகில் விற்கப்படும் பீடி, சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்யும் போலீசார், அவற்றை மீண்டும் புழக்கத்துக்கு விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாநிலம் முழுதும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பெட்டி கடைகள் உள்ளன. அவற்றில் பீடி, சிகரெட், குளிர்பானங்கள் போன்றவை விற்கப்படுகின்றன.
பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகில், 100 மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளில், பீடி, சிகரெட் விற்க, அரசு தடை விதித்துள்ளது.
அதே சமயம், பல்வேறு இடங்களில், 100 மீட்டர் சுற்றளவை தாண்டியுள்ள கடைகளில் விற்கப்படும் பீடி, சிகரெட்டை, போலீசார் மொத்தமாக பறிமுதல் செய்து, மற்ற கடைகளில் மீண்டும் புழக்கத்துக்கு விடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால், சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழக வணிகர் நல வாரிய நிர்வாக குழு முன்னாள் உறுப்பினரும், சென்னை திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்க தலைவருமான வி.பி.மணி கூறியதாவது:
பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகில், 100 மீட்டர் சுற்றளவில், பீடி, சிகரெட் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தில் உள்ள விதிகள் தொடர்பாக, அதிகாரிகளுக்கு முழுதுமாக தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் பள்ளி, கல்லுாரிக்கு அருகில் பீடி, சிகரெட் விற்கும் பெட்டி கடைகளுக்கு ஆய்வுக்கு வரும் சுகாதார துறை அதிகாரிகள், 100 ரூபாய் அபராதம் விதிப்பர்; அதற்கு உரிய ரசீது வழங்குவர்.
தற்போது, ஆய்வுக்கு வரும் போலீசார், தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போல் சிகரெட், பீடியையும் மொத்தமாக பறிமுதல் செய்கின்றனர். பின், வணிகர்களை குற்றவாளிகள் போல் பாவித்து, காவல் நிலையம் அழைத்து செல்கின்றனர்.
நீதிமன்றத்தில் செலுத்த வேண்டிய அபராத தொகையையும் போலீசாரே, 2,000 ரூபாய், 3,000 ரூபாய் என, இஷ்டத்துக்கு வாங்கி கொள்கின்றனர்.
பறிமுதல் விபரங்களை கணக்கில் எழுதி தருவதும் இல்லை. அவற்றை மற்ற கடைகளில் புழக்கத்துக்கு விடுகின்றனர். இதனால், சிறு வணிகர்களின் வாழ்வாதராம் பாதிக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் ஒரு ஒழுங்குமுறையை ஏற்படுத்தவும், அதை கடைபிடிக்கவும், போலீசாரை அரசு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.