சிவில் நீதிமன்றமா; சமாதானமா? ராமதாசுக்கு இருப்பது இரண்டே வழி
சிவில் நீதிமன்றமா; சமாதானமா? ராமதாசுக்கு இருப்பது இரண்டே வழி
ADDED : டிச 06, 2025 05:51 AM

சென்னை: பா.ம.க., பிரச்னையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், சிவில் நீதிமன்றம் செல்லப் போகிறாரா அல்லது மகனுடன் சமாதானமாக செல்லப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பில் கட்சியினர் உள்ளனர்.
பா.ம.க.,வில் அப்பா ராமதாஸ் - மகன் அன்புமணி ஆகியோருக்கு இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். பா.ம.க., தலைவராக அன்புமணியை தேர்தல் கமிஷன் அங்கீகரித்தது. இதை எதிர்த்து ராமதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், பா.ம.க., தலைவர் யார் என்ற பிரச்னைக்கு தீர்வு காண, சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளது.
இது, ராமதாஸ் தரப்புக்கு பின்னடைவாகக் கூறப்படுகிறது. அப்பா - மகன் இடையே சமாதானம் ஏற்படாவிட்டால், பா.ம.க., இரண்டாகி விடும். இது வடக்கு, மேற்கு மாவட்டங்களில் தி.மு.க., கூட்டணிக்கு சாதகமாகி விடும் என, அ.தி.மு.க., - பா.ஜ.,வுக்கு கவலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அ.தி.மு.க., - பா.ஜ., இரு கட்சி தலைமைகளும், ராமதாஸ், அன்புமணி இருவரிடமும் சமாதானம் பேசி வருவதாக கூறப்படுகிறது. 'தனித்தனியாக செயல்பட்டால் பா.ம.க.,வின் ஓட்டு வங்கி பாதியாக சரிந்துவிடும்.
'கட்சி நிர்வாகிகள், தி.மு.க., அல்லது த.வெ.க.,வுக்கு சென்று விடுவர். அதன்பின், கட்சியை மீட்டெடுப்பது கடினமாகி விடும்' என, பா.ம.க.,வுக்கு உள்ளேயே பலர் ராமதாஸ், அன்புமணியிடம் தெரிவித்து வருகின்றனர்.
டில்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ராமதாஸ் சிவில் நீதிமன்றம் சென்றால், பா.ம.க.,வில் பிளவு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும். பெரும்பான்மை மாவட்ட செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் அன்புமணி பக்கம் இருப்பதால், சிவில் நீதிமன்றத்திலும் ராமதாசுக்கு எதிராகவே தீர்ப்பு வரும் என, பலரும் கூறி வருகின்றனர். இதனால், ராமதாஸ் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பா.ம.க.,வினரிடையே ஏற்பட்டுள்ளது.
அடுத்த வாரத்தில் சென்னை வர திட்டமிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இப்பிரச்னையை தீர்க்க, ராமதாஸ், அன்புமணியை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பா.ம.க., ஒன்றிணைய வேண்டும் என்பதில் அமித் ஷாவும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் உறுதியாக இருப்பதால், எப்படியும் சமாதானம் ஏற்படும் என பா.ம.க.,வினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

