காங்., நிர்வாகி மீது 'குண்டாஸ்' ரத்து செய்வதாக முதல்வர் உறுதிமொழி
காங்., நிர்வாகி மீது 'குண்டாஸ்' ரத்து செய்வதாக முதல்வர் உறுதிமொழி
ADDED : ஆக 09, 2025 03:35 AM

சென்னை: குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி அப்ரோசை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், சென்னை போலீஸ் கமிஷனருக்கு, தமிழக காங்கிரஸ் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கருப்புக் கொடி போராட்டம் நடத்த முயற்சித்த காரணத்தால், தமிழக காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை பிரிவு செயலர் அப்ரோஸ், சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அவரை விடுவிக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் அழகிரி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலர் ராம்மோகன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி:
சமீபத்தில், அப்ரோஸ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முதல்வரை தொடர்பு கொண்டு, அப்ரோஸ் குடும்பம் மற்றும் உடல் நிலை காரணமாக, அவரை குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதை பரிசீலனை செய்வதாக முதல்வரும் உறுதி அளித்திருக்கிறார். செல்வப்பெருந்தகை கோரிக்கையை முதல்வர் ஏற்றுக் கொண்டதை, தமிழக காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறோம். முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
அப்ரோஸ் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சென்று, சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்தோம். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவரை மிக விரைவில் விடுதலை செய்ய உதவுவதாக கமிஷனர் உறுதி அளித்துள்ளார். அவருக்கும் எங்கள் நன்றி. இவ்வாறு அவர்கள் கூறினர்.