'நீல கொடி சான்று' பணிகளுக்கு நிபந்தனைகள்; கடலோர ஒழுங்குமுறை குழுமம் உத்தரவு
'நீல கொடி சான்று' பணிகளுக்கு நிபந்தனைகள்; கடலோர ஒழுங்குமுறை குழுமம் உத்தரவு
UPDATED : ஜன 02, 2025 04:13 AM
ADDED : ஜன 01, 2025 10:28 PM

சென்னை:சென்னை, கடலுார், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களில், கடற்கரைகளுக்கு 'நீல கொடி' சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ள, தமிழக கடலோர மேலாண்மை ஒழுங்குமுறை குழுமம், ஒன்பது நிபந்தனைகளை விதித்துள்ளது.
சுற்றுலாப் பயணியரை ஈர்ப்பது, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது போன்ற பணிகளுக்காக, கடற்கரைகளுக்கு சர்வதேச அளவில் 'நீல கொடி' சான்றிதழ் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், சென்னை மெரினா, ராமநாதபுரம் அரியமான், துாத்துக்குடி காயல்பட்டினம், திருநெல்வேலி கோடாவிளை, நாகப்பட்டினம் காமேஸ்வரம், புதுக்கோட்டை கட்டுமாவடி, கடலுார் சில்வர் கடற்கரை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடற்கரைகளுக்கு, நீல கொடி சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு சர்வதேச அமைப்பு வகுத்துள்ள நெறிமுறைகளின்படி, 33 வகையான வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
அதற்காக நிதி ஒதுக்கி, பணிகள் நடந்து வருகின்றன. கடற்கரை பகுதிகளில், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் கீழ், ஒப்புதல் பெற வேண்டும்.
முதல் கட்டமாக சென்னை மெரினா, கடலுார் சில்வர் கடற்கரை, நாகப்பட்டினம் காமேஸ்வரம், ராமநாதபுரம் அரியமான் கடற்கரையில், அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள, கடலோர ஒழுங்குமுறை மண்டல குழுமத்திடம், சென்னை மாநகராட்சி, கடலுார், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகங்கள் விண்ணப்பித்துள்ளன.
குழுமத்தின் சமீபத்திய கூட்டத்தில், விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, கடற்கரை சார்ந்த பணிகள் செய்ய, ஒன்பது நிபந்தனைகளை விதித்துள்ளது.
அதன் விபரம்:
கடற்கரை நில பகுதியில், சாலைக்கு வெளியில் எவ்வித மேம்பாட்டு பணிகளையும் செய்யக் கூடாது
கடல் ஆமைகள் முட்டையிடும் இடம், ஆமைகள் வந்து செல்லும் பகுதிகளில், எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது
இத்திட்டத்துக்காக எந்த விதத்திலும் நிரந்தர சாலைகள் அமைக்க கூடாது
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே, இங்கு நடக்கும் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்
நீல கொடி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் அரசு துறைகள், நீடித்த கடலோர மேலாண்மைக்கான தேசிய மையத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்
கடற்கரை பகுதிகள் தவிர்த்து, சாலை போன்ற இடங்களில்தான் கழிவறைகளை கட்ட வேண்டும்
கடற்கரையின் இயற்கை எழில் தோற்றத்தை, எந்த விதத்திலும் மறைக்கும் பணிகளை செய்யக் கூடாது
கடற்கரையின் மணல் பகுதி, எந்த விதத்திலும் பாதிக்காமல் பணிகள் செய்யலாம்
கடற்கரை பகுதிகளை, குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக சுத்தப்படுத்தும் பணிகளை செய்ய வேண்டும்
இவ்வாறு கடற்கரை ஒழுங்கு முறை குழுமம் தெரிவித்துள்ளது.