தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாத சளி, இருமல்! 2 வாரம் நீடிக்கும் என தகவல்
தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாத சளி, இருமல்! 2 வாரம் நீடிக்கும் என தகவல்
ADDED : அக் 31, 2024 01:38 AM

சென்னை : தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாத சளி, இருமலால், மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், 65 சதவீதம் பேர் சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் வெயில், மழை, பனி என மாறுபட்ட தட்பவெப்ப நிலையால், மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பலருக்கு, சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. 'ஆன்டிபயாடிக்' போன்ற தடுப்பு மருந்துகளால் காய்ச்சல் பாதிப்பு குறைந்தாலும் இருமல், சளி போன்ற பாதிப்புகள், இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கின்றன.
இந்நிலையில், தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்பாடாத இருமல், சளி பாதிப்புகள் குறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள், சென்னை போன்ற நகரங்களில் சமீபத்தில் ஆய்வு நடத்தினர்.
அது தொடர்பாக, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது: அதிகரித்து வரும் இருமல், சளி பாதிப்புகள் குறித்து, 50 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஆர்.எஸ்.வி., - ஏ என்ற சுவாச தொற்று வைரசால், 65 சதவீதம் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
அதேபோல், இன்ப்ளூயன்ஸா - பி வைரசால், 12 சதவீதமும், மற்ற பாதிப்புகள் 23 சதவீதமும் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வகைகள் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால், மக்கள் அச்சப்பட வேண்டாம்.
காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் அலட்சியப்படுத்தாமல், டாக்டரிடம் சிகிச்சை பெறுவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.