உதயநிதியை வரவேற்க வசூல்; ஆடியோ பரவியதால் அதிர்ச்சி
உதயநிதியை வரவேற்க வசூல்; ஆடியோ பரவியதால் அதிர்ச்சி
ADDED : ஏப் 28, 2025 05:02 AM

திருப்பூர் : துணை முதல்வர் உதயநிதி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று கோவை வந்தார். அவரை வரவேற்கும் நிகழ்ச்சிக்கு, கட்சியினர் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக, வர்த்தகர்கள் இருவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஆடியோவில், 'துணை முதல்வர் உதயநிதி ஜல்லிக்கட்டு துவக்கி வைக்க வர்றாரு. அவரை வரவேற்கிற செலவு இருக்கு. கட்டாயம் காசு கொடுக்கணும்னு நின்னாங்க. நானே சம்சாரத்தோட தாலிக் கொடியை அடகு வச்சு தான் இப்ப மெட்டீரியல் வாங்கிப் போட்டிருக்கேன்.
இதுல இவங்களுக்கு எதை தர்றது?' என, ஒருவர் கூற, மற்றொருவர், 'இதே மாதிரி தான் நம்ம கடைக்கும் வந்து கேட்டிருக்காங்க. அக்கா தான் கடையில இருந்துருக்கு.
'அவரு இல்லை. வெளியிலே போய்ட்டாருன்னு' சொன்னதுக்கு, 'போனை போட்டு பேசிட்டு வசூல் கொடுங்க'ன்னு கட்டாயப்படுத்தியிருக்காங்க.
'இன்னைக்கு வர்றோம்'னு சொல்லிட்டு போனாங்களாம். இதுவரைக்கும் காணலை. அப்படி யாரும் வந்தால் நீ ரோட்டில் வந்து உக்காந்துடுன்னு சொல்லிட்டேன்' என்கிறார்.
மேலும், 'இவங்க பிராந்தி கடையில வாங்கற காசெல்லாம் போட்டு செலவு பண்ண வேண்டியது தானே. அரசாங்க செலவுல துணை முதல்வர் வர்றாரு, போறாரு.
'கட்சிக்காரங்க வரவேற்கனும்னா அவங்க சொந்த காசுல செலவு பண்ணணும். எதுக்கு பிச்சை எடுக்கற மாதிரி கடை கடையாக போகணும்' என்கிறார்.
இவ்வாறு இருவரிடையே நடந்த உரையாடல், 15 நிமிடம் வரை நீள்கிறது. இந்த ஆடியோ பதிவு கோவை பகுதி வர்த்தர்கள் மற்றும் கட்சியினரின் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.