பீடியுடன் பீஹாரை ஒப்பிடுவதா?: காங்கிரசுக்கு பா.ஜ., கண்டனம்!
பீடியுடன் பீஹாரை ஒப்பிடுவதா?: காங்கிரசுக்கு பா.ஜ., கண்டனம்!
ADDED : செப் 06, 2025 12:43 AM

ஜி.எஸ்.டி., சீரமைப்பு நடவடிக்கையில், பா.ஜ.,வை கேலி செய்ய முயன்ற காங்., பீஹாரையும், பீடியையும் ஒப்பிட்டதால், வாங்கிக் கட்டிக் கொண்டது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்கிறது.
இதை முன்னிட்டு, அங்கு தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கி விட்டது.
விமர்சனம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, சமீபத்தில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் சீர்திருத்தங்களை மேற்கொண்டது.
அதன்படி, 5 மற்றும் 18 என இரண்டடுக்கு வரி சதவீதங்கள் மட்டுமே வரும் 22 முதல் அமலுக்கு வரவுள்ளன.
அந்த வகையில், சுருட்டுகள், சிகரெட்டுகள், புகையிலை ஆகியவற்றுக்கான ஜி.எஸ்.டி., வரி, 28ல் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
அதே சமயம், பீடி மீதான வரி, 28ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.
இது குறித்து, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த கேரள காங்., பிரிவு, 'பீடியும், பீஹாரும் 'பி' என்ற எழுத்தில் துவங்குகின்றன. இனி பாவமாக கருத முடியாது' என விமர்சித்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கூறுகையில், ''முதலில், பிரதமர் மோடியின் தாயாரை காங்., நிர்வாகிகள் அவதுாறு செய்தனர். தற்போது ஒட்டுமொத்த பீஹாரையும் இழிவுபடுத்துகின்றனர். இது தான் காங்கிரசின் உண்மையான முகம்,'' என்றார்.
'பல்டி' பல்வேறு தரப்பினரின் கண்டனங்களை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய பதிவை எக்ஸ் வலைதளத்தில் இருந்து நீக்கிய கேரள காங்., பிரிவு, 'ஜி.எஸ்.டி., விவகாரத்தில், பிரதமர் மோடியின் தேர்தல் தந்திரங்கள் மீதான எங்களது விமர்சனம், தவறாக திரிக்கப்பட்டு உள்ளது.
'யாராவது புண் பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்' என, 'பல்டி' அடித்தது.
தேஜஸ்வி ஆதரிக்கிறாரா?
காங்., மீண்டும் எல்லை மீறி உள்ளது. பிரதமர் மோடியின் தாயாரை அவமதித்த காங்., தற்போது, பீடியுடன் பீஹாரை ஒப்பிட்டுள்ளது. இதை தேஜஸ்வி யாதவ் ஆதரிக்கிறாரா? காங்., கூட்டணியில் தி.மு.க., உட்பட அனைத்து கட்சிகளும், பீஹாரை வெறுக்கின்றன. இதற்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும். -- ஷெசாத் பூனாவாலா செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
- நமது டில்லி நிருபர் -