UPDATED : நவ 21, 2024 01:14 AM
ADDED : நவ 21, 2024 12:30 AM

சோழிங்கநல்லுார், இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., பகுதியை உள்ளடக்கிய சோழிங்கநல்லுார் மண்டலத்தில் ஒன்பது வார்டுகள் உள்ளன; 30 மயானங்கள் உள்ளன.
ஒவ்வொன்றும், 25 சென்ட் முதல் 2 ஏக்கர் வரை பரப்பு உடையவை. 25 மயானங்களில் எரியூட்டும் தகனம் செய்யப்படும். விறகு கட்டைகளை அடுக்கி எரியூட்டிய இந்த மயானங்களை, தலா, 2.50 கோடி ரூபாயில் எரிவாயு மயானங்களாக மாற்றப்படுகின்றன.
மொத்த வார்டில், 194, 199, 200 ஆகிய வார்டுகளில் பணி முடிந்து பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ள மயானங்களில் பணி நடந்து வருகின்றது. இவற்றில் தகனம் செய்வதற்கு இலவசம். ஒரு உடல் தகனம் செய்ய, ஒப்பந்ததாரருக்கு 1,430 ரூபாயை மாநகராட்சி வழங்குகிறது.
ஆனால், தகனம் செய்வதற்கு போதிய உடல்கள் வராததால், சுகாதார அதிகாரிகள் புறநகர் பகுதிக்கு சென்று, இறந்த உடல்களை அனுப்பி வைக்க வலியுறுத்துவதால், மண்டல வார்டுகளில் சுகாதாரப் பணிகள் பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் புலம்புகின்றனர்.
சுகாதார அதிகாரிகள் கூறியதாவது:
தற்போதுள்ள வார்டுகள் விரிவாக்கத்திற்கு முன், ஊராட்சி, பேரூராட்சியாக இருந்ததால், தனித்தனி மயானங்கள் இருந்தன. மாநகராட்சியில் சேர்ந்த பின், இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரில் தலா இரண்டு வீதம், நான்கு மயானங்கள் போதும். ஒன்பது மயானங்கள் அமைப்பதால், 1 - 2 கி.மீ., துார இடைவெளியில் ஒரு மயானம் வீதம் அமைகிறது.
ஈஞ்சம்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் மயானங்களை தவிர, இதர மயானங்களில், மாதம், நான்கு, ஐந்து உடல்கள்தான் தகனம் செய்யப்படுகின்றன.
அடையாறு, கோடம்பாக்கம் போன்ற பெரிய மண்டலங்களில்கூட, மூன்று, நான்கு மயானங்கள்தான் உள்ளன. இங்கு, ஒன்பது மயானங்கள் தேவைதானா என அதிகாரிகள் யோசிக்க வேண்டும்.
ஒரு மயானத்திற்கு 2.50 கோடி ரூபாய் செலவு செய்வதால், அதற்கு ஏற்ப உடல்களை தகனம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
புறநகர் பகுதியில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிகளில் விறகுக்கட்டை வைத்து தகனம் செய்கின்றனர். அங்கு சென்று அதிகாரிகள், மயான ஊழியர்களிடம் பேசி, இறந்த உடல்களை மாநகராட்சி எரிவாயு மயானத்திற்கு அனுப்புமாறு கூறுகின்றனர்.
மண்டலத்தில் மர்ம காய்ச்சல் தடுப்பு, கொசு ஒழிப்பு, அம்மா உணவகம் கண்காணிப்பு, பிறப்பு, இறப்பு பதிவு போன்ற பணிகள் உள்ளன. ஒரு சுகாதார ஆய்வாளர், இரண்டு, மூன்று வார்டுகள் பார்க்கின்றனர். ஊராட்சிகளுக்கு சென்று இறந்த உடல்களை அனுப்ப கூறுவதால், எங்கள் வழக்கமான பணிகள் பாதிக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சென்னையின் மக்கள் தொகையும், கட்டமைப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ப, அரசு திட்டங்களை விரிவாக்கம் செய்ய வேண்டும். அதற்கான கட்டமைப்புகள் அமைக்க இடம் தேவை. ஆனால், மாநகராட்சியில் போதிய இடம் கிடைப்பதில்லை.
விரிவாக்க மண்டலங்களில் எரிவாயு மயானங்களாக மாற்றுவதால், எண்ணிக்கையை குறைத்து, மீதமுள்ள இடங்களை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.
தகன மயானங்களை இரு ஆண்டுகளுக்கு பின்னரும், அடக்கம் செய்யும் மயானங்களை, 12 ஆண்டுகளுக்கு பிறகும், வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். அதற்கு ஏற்ப, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.