ஆட்சியில் பங்கு கேட்டு தி.மு.க.,விடம் காங்கிரஸ் மீண்டும் 'டிமாண்ட்'
ஆட்சியில் பங்கு கேட்டு தி.மு.க.,விடம் காங்கிரஸ் மீண்டும் 'டிமாண்ட்'
ADDED : ஜன 06, 2026 04:30 AM

- நமது நிருபர் -:
ஆட்சியில் பங்கு வேண்டும்' என, காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் வாயிலாக டில்லி மேலிடம் மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் ஜன.3ம் தேதி சென்னையில் பேட்டியளித்தபோது, ''தி.மு.க.,வுடன் தான் காங்கிரஸ் கூட்டணி பேச்சு நடத்தி வருகிறது; விஜயின் த.வெ.க.,வுடன் பேசவில்லை. ஆட்சி, அதிகாரம் வேண்டாம் என, எந்த அரசியல் கட்சி தான் சொல்லும்,'' என்றார்.
தமிழக காங்., துணை தலைவர் சொர்ணா சேதுராமன் கூறுகையில், ''தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு வேண்டும்; கூடுதல் தொகுதிகள் கேட்க வேண்டும் என, நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்,'' என்றார்.
சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார் கூறுகையில், ''காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும்; ஆட்சியிலும் பங்கு கேட்க வேண்டும். இது, என் கருத்து மட்டுமல்ல; தொண்டர்களின் விருப்பமும் கூட. இது குறித்து மேலிடத்தில் எடுத்து சொல்வேன்,'' என்றார்.
தி.மு.க., கூட்டணியில் நீடிக்கிறோம் என கூறி விட்டு, டில்லிக்கு கிரிஷ் ஷோடங்கர் சென்ற நிலையில், காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் நேற்று தனியார் நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பை பகிர்ந்து, ஆட்சியில் பங்கு கோஷத்தை வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'தமிழகத்தில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியே ஓட்டுகள் உள்ளன. கருத்து கணிப்பில் உள்ள தரவு, காங்கிரஸ் மட்டுமல்ல; மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கவில்லை என நினைக்கிறேன்.
'ஆனால், கூட்டணி இல்லாமல், தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது என்பது நிதர்சனம். எனவே, அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இப்போது வந்து விட்டது' என தெரிவித்துள்ளார்.
இது குறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
சென்னையில் நேற்று முன்தினம் ஊடக பொங்கல் விழா நடந்தது. அதில் பங்கேற்ற தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழியிடம், கிரிஷ் ஷோடங்கர் பேசுகையில், 'ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் ஆகிய கோரிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலினிடம் நீங்கள் கேட்டு சீக்கிரம் முடிவை தெரிவிக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, கிரிஷ் ஷோடங்கர் கூறியதை, முதல்வர் ஸ்டாலினிடம் கனிமொழி தெரிவித்துள்ளார். அதற்கு ஸ்டாலின், 'தி.மு.க., எம்.பி.,க்கள் குழு வாயிலாக, இது தொடர்பாக, ராகுலை சந்தித்து பேசுவோம்' என பதிலளித்துள்ளார்.
தற்போது ராகுல் வெளிநாடு சென்றுள்ளதால், அவர் டில்லி திரும்பியதும், கனிமொழி தலைமையிலான எம்.பி.,க்கள், அவரை சந்தித்து பேசி, தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணியை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.
கருத்து கணிப்பின்படி, த.வெ.க., - காங்கிரஸ் ஓட்டு சதவீதத்தை கூட்டினால், தி.மு.க., வுக்கு இணையாக வருகிறது. எனவே, ஆட்சியில் பங்கு கேட்கும் அறிக்கையை, டில்லி மேலிடம் ஒப்புதல் பெற்று மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

