காங்., மாவட்ட தலைவர்களுக்கு தி.மு.க.,வினரை சந்திக்க தடை
காங்., மாவட்ட தலைவர்களுக்கு தி.மு.க.,வினரை சந்திக்க தடை
ADDED : ஜன 23, 2026 05:34 AM

தமிழக காங்.,கில், வரும் சட்டசபை தேர்தலுக்காக 'தி.மு.க.,வுடன் கூட்டணி' என ஒரு கோஷ்டியும், 'த.வெ.க.,வுடன் கூட்டணி' என மற்றொரு கோஷ்டியும் கூறி வருகிறது.
இந்நிலையில், தமிழக காங்கிரசின் 71 மாவட்டங்களுக்கு, புதிய தலைவர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். பெரும்பாலான மாவட்டங்களில், ஆளுங்கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், காங்கிரசின் புதிய மாவட்டத் தலைவர்கள் நல்ல தொடர்பில் உள்ளனர்.
இதனால், ஆளுங்கட்சி அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆசி பெறவும், உறவை நெருக்கமாக்கிக் கொள்ளவும் அவர்கள் விரும்புகின்றனர். ஆனால், கட்சித் தலைமை, 'புதிய தலைவர்கள் யாரும், கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்கக் கூடாது' என வாய்மொழி உத்தரவு போட்டுள்ளது. இதனால், காங்.,கின் புதிய மாவட்டத் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காங்., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: காங்., முன்னாள் தலைவர் ராகுல், கட்சி நிகழ்ச்சிக்காக வரும் பிப்., 14ல் சென்னைக்கு வர உள்ளார். அவர் வந்து சென்ற கையோடு, கூட்டணி இறுதி செய்யப்பட்டு விடும். அதற்குள், தி.மு.க.,வோடு யாரும் நெருக்கம் காட்ட வேண்டியதில்லை என்பதாலேயே, மாநில தலைமை புதிய தலைவர்களுக்கு மறைமுகமாக அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

