தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச ஸ்டாலினுடன் காங்., குழு இன்று சந்திப்பு
தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச ஸ்டாலினுடன் காங்., குழு இன்று சந்திப்பு
ADDED : டிச 03, 2025 04:57 AM

தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, வரும் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக அமைத்துள்ள ஐவர் குழு, முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேச உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டணி கட்சிகளுடன், தொகுதி பங்கீடு குறித்து பேச, காங்கிரஸ் டில்லி மேலிடம் சார்பில், சமீபத்தில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. குழுவில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதிக் ஆல்வா, சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு, முதல்வர் ஸ்டாலினை சென்னை அறிவாலயத்தில் இன்று சந்தித்து, தொகுதி பங்கீடு குறித்தும், அமைச்சரவையில் பங்கு குறித்தும் பேச்சு நடத்த உள்ளது.
தமிழக காங்., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: காங்கிரசில் வழக்கமாக, தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச, அகில இந்திய பொதுச்செயலர் தலைமையில், மூத்த தலைவர்கள் சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி போன்றோர் இடம்பெறும் வகையில் குழு அமைக்கப்படும்.
இம்முறை கிரிஷ் ஷோடங்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர் கட்சி மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது முதல், ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்ற கருத்துக்கு உடன்பட்டவராக உள்ளார்.
த.வெ.க., தலைவர் விஜய்க்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவருடன், கூட்டணி குறித்து கிரிஷ் ஷோடங்கர் கோவாவில் பேச்சு நடத்தி உள்ளார். அதேபோல், சட்டசபை காங்கிரஸ் தலைவராக உள்ள ராஜேஷ் குமாரும் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகளில் போட்டி என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், ஆட்சியில் பங்கு கேட்கும் கருத்தை வெளிப்படுத்தாமல், தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதை மட்டும் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை விரும்புகிறார். ஏற்கனவே, தொகுதி பங்கீடு எண்ணிக்கை குறித்த கடிதத்தை, தி.மு.க., மூத்த எம்.பி., ஒருவர், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், கார்கே போன்றோரிடம் வழங்கி உள்ளார்.
ஐவர் குழு, லோக்சபா தொகுதிக்கு ஒரு சட்டசபை தொகுதி என்ற அடிப்படையில் 39 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட், அமைச்சர், வாரியத் தலைவர் போன்ற பதவிகளை கேட்டு, ஸ்டாலினிம் பேச்சு நடத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

