காங்., புதிய மா.த., அறிவிப்பு மூன்று முறை தள்ளிவைப்பு; 'பேரம் பஞ்சாயத்து' எதிரொலியா?
காங்., புதிய மா.த., அறிவிப்பு மூன்று முறை தள்ளிவைப்பு; 'பேரம் பஞ்சாயத்து' எதிரொலியா?
ADDED : ஜன 01, 2026 03:52 AM

மதுரை: தமிழக காங்.,ல் புதிய மாவட்ட தலைவர்கள் அறிவிப்பை அகில இந்திய தலைமை மூன்று முறை தள்ளி வைத்துள்ளதால் கட்சியினர் உற்சாகம் இழந்துள்ளனர்.
பா.ஜ., தொடர் வெற்றி எதிரொலியாக கட்சியை பலப்படுத்த பல மாநிலங்களிலும் காங்., பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல ஆண்டுகளாக பதவியில் நீடிக்கும் மாவட்ட தலைவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, புதிய தலைவர்களை நியமிக்க முடிவு செய்து, அகில இந்திய அளவில் பொறுப்பாளர்கள் குழுக்களை நியமித்தது.
மொத்தமுள்ள 77 மாவட்டங்களில் 74 தலைவர்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்து புதிய தலைவர் பதவிக்கு போட்டியிடுவோரிடம் விருப்ப மனுக்களை பெற்ற பொறுப்புக் குழு, மாவட்டம் வாரியாக நேர்காணல் நடத்தியது. ஒரு மாவட்ட தலைவர் பதவிக்கு தலா 6 பேர் வீதம் தேர்வு செய்து 74 மாவட்டங்களுக்கான புதிய தலைவர்களை தேர்வு செய்வதற்கான விரிவான அறிக்கையை டில்லி அகில இந்திய தலைமைக்கு ஒரு மாதத்திற்கு முன் சமர்ப்பித்தது.
அதன்படி புதிய மாவட்ட தலைவர் அறிவிப்பு டிச., 14ல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. பின் டிச.,22, 29 என மூன்று முறை தள்ளி வைக்கப்பட்டு, தற்போது ஜன.,5ல் தான் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காங்., சீனியர் நிர்வாகிகள் கூறியதாவது: தமிழக காங்., தலைவர்கள் கோஷ்டி பூசல் காரணமாக தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் இழுத்தடிக்கப்படுகின்றன. தேர்தல் நேரத்தில் புதிய மாவட்ட தலைவர் தேர்வு வேண்டாம் என மூத்த தலைவர்கள் பலர் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ.,வாக போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என பல மாவட்ட தலைவர்கள் கனவில் உள்ளனர். மாவட்ட தலைவர் பதவி பறிபோனால் எம்.எல்.ஏ., சீட் வாய்ப்பும் கிடைக்காது. இதனால் ஒட்டுமொத்த எதிர்ப்புகளையும் டில்லி தலைமைக்கு புகாராக அனுப்பி வருகின்றனர். புதிய பதவிக்கு ரூ.பல லட்சம் பேரம் நடந்துள்ளதாக காங்., சட்டசபை தலைவரே கடுமையான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இதன் காரணமாக புதிய மாவட்ட தலைவர் அறிவிப்பு தள்ளிப்போகிறது. அறிவிப்பு வெளியாவது சந்தேகமே என்றனர்.

