ரூ.4,000 டிக்கெட் ரூ.25,000க்கு விற்பனை; ஸ்ரீரங்கத்தை அதிர வைத்த மோசடி
ரூ.4,000 டிக்கெட் ரூ.25,000க்கு விற்பனை; ஸ்ரீரங்கத்தை அதிர வைத்த மோசடி
ADDED : ஜன 01, 2026 03:57 AM

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பின்போது, வி.ஐ.பி., பக்தர்களை குறிவைத்து, கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பக்தர்கள் சிலர் கூறியதாவது: ஸ்ரீரங்கத்தில் பக்தர்களின் பக்தியை பணமாக்கும் முயற்சியில், பலர் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், சொர்க்கவாசல் திறப்பின்போது, பல மடங்கு கூடுதல் பணத்திற்கு கள்ளச்சந்தையில் நுழைவு டிக்கெட், விற்கப்படுகிறது.
இந்த ஆண்டு, ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த, தி.மு.க., பிரமுகர் ராம் குமார், கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்றதாக புகார் எழுந்துள்ளது.
சொர்க்கவாசல் திறப்பு டிக்கெட் கட்டணம், 4,000 மற்றும் 700 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ராம்குமார் பெருமளவு டிக்கெட்டுகளை, அறநிலையத் துறையிடம் பெற்று, அதிக விலைக்கு விற்றுள்ளார்.
சொர்க்கவாசல் திறப்புக்கு முந்தைய நாள் பகலில், 700 ரூபாய் டிக்கெட் 2,000 ரூபாய்க்கும் 4,000 ரூபாய் டிக்கெட் 8,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டன.
அன்று இரவு 700 ரூபாய் டிக்கெட், 5,000 ரூபாய்க்கும், 4,000 ரூபாய் டிக்கெட், 25,000 ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டன. தி.மு.க., பிரமுகர் ராம்குமார், அறநிலையத்துறை அமைச்சர் பெயரை தவறாக பயன்படுத்தி, டிக்கெட் விற்பனை செய்துள்ளார்.
இது குறித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலர் சீனிவாசன், கலெக்டருக்கு புகார் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது ஒருபுறமிருக்க, சிறப்பு தரிசன கட்டண டிக்கெட்டுகள் போன்றே, போலி டிக்கெட்டுகளும் தயார் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டுள்ளன. எனவே, கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை நடந்தது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள், காவல்துறையிடம் புகார் அளித்து, விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

