'தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லையேல் காங்கிரஸ் ஒரு 'சீட்' கூட ஜெயிக்காது'
'தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லையேல் காங்கிரஸ் ஒரு 'சீட்' கூட ஜெயிக்காது'
ADDED : நவ 12, 2025 04:27 AM

கோவை: மக்களுக்கு நல்லது செய்ய தவறியதை மறைக்கவே, தி.மு.க., மடைமாற்றம் செய்வதாக குற்றஞ்சாட்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், போலி வாக்காளர்களை வைத்தா ஸ்டாலின் வெற்றி பெற்றார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை முதலிபாளையத்திலுள்ள மண்டபத்தில் நடந்த, பா.ஜ. கோவை கோட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
அவர் அளித்த பேட்டி:
வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் செய்வதற்கு, தி.மு.க., அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தி.மு.க., கூட்டணி அங்கம் வகிக்கும் காங்., ஆட்சி காலத்திலும் இச்சீர்திருத்தம் நடந்துள்ளது. கடந்த 2,000ம் ஆண்டுக்கு முன், 10 முறையும், அதன்பின், மூன்று முறையும் சிறப்பு சீர்திருத்தம் நடந்துள்ளது.
அப்போது ஏன் தி.மு.க., எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? வாக்காளர் சீர்திருத்தப் பணி என்பது மக்களின் ஓட்டுரிமையை பறிக்கிறது, பா.ஜ., வெற்றி பெற சூழ்ச்சி நடக்கிறது என்கிறார், முதல்வர் ஸ்டாலின். அரசியலமைப்பு சட்டத்தின்படிதான், தேர்தல் ஆணையம் இப்பணியை மேற்கொள்கிறது.
இது தெரியாமல் துணை முதல்வர் உதயநிதி, இது 'ரிவிஷன்' அல்ல; 'ரெஸ்ட்ரிக் ஷன்' எனக் கூறி வருகிறார். முதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறை சரியில்லை என்றனர்; அவர்கள் வெற்றி பெற்றதும் அது குறித்து எதுவும் பேசவில்லை.
அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறையை பா.ஜ., தவறாக பயன்படுத்துகிறது என்கின்றனர். வருமான வரித்துறையின் வழக்கு, ஒரு இடத்தில்கூட தவறாகப் போடப்படவில்லை.
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி சீர்குலைந்துள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய தவறியதையும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததையும் மறைக்கவே, வாக்காள சீர்திருத்தப் பணியை குறை கூறி, தி.மு.க.,வினர் மடைமாற்றம் செய்கின்றனர்.
வாக்காளர் சீர்திருத்தப் பணியை, மாநில அரசு ஒத்துழைக்க மறுத்தாலோ, தடுக்க முயன்றாலோ, சட்ட ரீதியான நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
'நீட்' தேர்வை வரவிடாமல் தி.மு.க.,வினர் தடுத்தனர். 'நீட்' வந்த பிறகுதான் கிராமப்புற ஏழை மாணவர்கள் டாக்டர் ஆகின்றனர்.
மத்திய அரசின் நல்ல திட்டங்கள், தமிழக மக்களுக்கு கிடைக்காமல் தடுக்கிறது தி.மு.க., அரசு. தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கவில்லையேல், தேர்தலில் காங்., ஒரு சீட் கூட ஜெயிக்காது. தேசியத்தையும், ஆன்மிகத்தையும் மனதில் வைத்து நடத்தும் கட்சி பா.ஜ., ஒன்றுதான்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

