த.வெ.க.,வுடன் காங்கிரஸ்; ராகுலை சந்திக்க விஜய் முயற்சி?
த.வெ.க.,வுடன் காங்கிரஸ்; ராகுலை சந்திக்க விஜய் முயற்சி?
UPDATED : ஜூலை 17, 2025 01:18 PM
ADDED : ஜூலை 17, 2025 02:31 AM

சென்னை: மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு முன், ராகுலை த.வெ.க., தலைவர் விஜய் சந்திப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
த.வெ.க., முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், கடந்த 2024 அக்டோபரில் நடந்தபோது, தன் தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்றும், ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார்.
ஆனால், இதுவரை எந்த கட்சியும் கூட்டணிக்காக, த.வெ.க.,வை நேரடியாக அணுகவில்லை.
எதிர்ப்பு தலைவர்கள்
அ.தி.மு.க., தரப்பில், கூட்டணி முயற்சி மேற்கொண்டாலும், தன் தலைமையில் தான் கூட்டணி எனவும், பா.ஜ.,வுக்கு அதில் இடமில்லை எனவும் விஜய் உறுதியாக இருந்ததால், அந்த முயற்சி பாதியில் நின்றது.
இதையடுத்து, தி.மு.க., கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை இழுக்க, விஜய் தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. அக்கட்சி பிடிகொடுக்காமல் நழுவி வருகிறது.
அடுத்ததாக, காங்கிரஸ் உடன் கூட்டணி சேர, த.வெ.க., திட்டமிடுகிறது. இதற்காக, டில்லியில் காங்கிரஸ் எம்.பி., ராகுலை சந்திக்க நேரம் கேட்டு, விஜய் தரப்பில் தகவல் அனுப்பபட்டு உள்ளது. இதற்கு, தமிழக காங்கிரசில் உள்ள தி.மு.க., எதிர்ப்பு தலைவர்கள் சிலர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
தொழில் வளம் மிகுந்த தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக உள்ள அக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரை, எழும்பூர் தொகுதிக்கு மாறும்படி, தி.மு.க., தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளது.
மீண்டும் அவர் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்பதால், தி.மு.க., தேர்தல் வியூக வகுப்பு நிறுவனம் தந்த ஆலோசனைப்படி, அந்த எம்.எல்.ஏ.,விடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், வருமானம் மிகுந்த அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடவே அவர் விரும்புகிறார்.
கார்கேவிடம் பேச்சு
தி.மு.க., தலைமையின் செயலால், அதிருப்தியில் உள்ள அவரை, சென்னையில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டில், விஜய் சந்தித்து, ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், விஜய் சில நிமிடங்கள் மொபைல் போனில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என, காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகின்றனர். ஆனால், ஆதாயத்திற்காக தி.மு.க.,வுடன், 10 சீட்டுக்கும், 20 சீட்டுக்கும் காங்கிரஸ் கூட்டணி அமைக்கிறது.
த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்தால், மீண்டும் காமராஜர் ஆட்சி அமைக்கலாம். த.வெ.க.,வும், காமராஜரை கொள்கை தலைவராக அறிவித்துள்ளது.
மாநாட்டுக்கு முன்
இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ந்தால், மற்ற கட்சிகளும் தேடி வரும். இந்த தகவல்களை எல்லாம், ராகுலிடம் எடுத்துக்கூறுமாறு, காங்., தேசிய தலைவரிடம் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
விரைவில், ராகுல் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக, அவரும் விஜயிடம் உறுதி அளித்துள்ளார். மதுரையில் த.வெ.க., இரண்டாவது மாநில மாநாடு நடப்பதற்குள், இந்த சந்திப்பு நடக்கலாம். இவ்வாறு த.வெ.க., வட்டாரங்கள் கூறின.