விமர்சித்தால் நீதிமன்றம் செல்வோம்: தேர்தல் கமிஷனுக்கு காங்., கடிதம்
விமர்சித்தால் நீதிமன்றம் செல்வோம்: தேர்தல் கமிஷனுக்கு காங்., கடிதம்
ADDED : நவ 02, 2024 01:14 AM

புதுடில்லி: சமீபத்தில் நடந்து முடிந்த ஹரியானா சட்டசபை தேர்தலில், 48 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ., மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் 37 இடங்களில் மட்டுமே வென்றது.
இந்த முறை ஆட்சியை பிடித்துவிடுவோம் என நம்பிக்கையுடன் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஓட்டு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோதே, முடிவுகளை அறிவிப்பதில் திடீர் தாமதம் ஏற்பட்டதாக காங்., குற்றஞ்சாட்டியது. அதை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.
இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் காங்., புகார் அளித்தது. அதற்கு தேர்தல் கமிஷன் சமீபத்தில் பதில் அளித்தது. அதில், 'தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி இல்லாததால், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்., வைத்துள்ளது' என தேர்தல் கமிஷன் தெரிவித்தது. இதனால் காங்., தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கையெழுத்திட்டு தலைமை தேர்தல் கமிஷனுக்கு நேற்று காரசார கடிதம் எழுதினர்.
அதன் விபரம்:
தேர்தல் கமிஷன் குற்றமற்றது என உங்களுக்கு நீங்களே சான்றளித்துக் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை.
இதுபோன்ற பதில்களை நாங்கள் எப்போதும் கடந்து சென்று விடுவோம். ஆனால் இந்த முறை தேர்தல் கமிஷனின் தொனியும், அவர்கள் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளும், காங்., மீது அவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளும் இந்த கடிதத்தை எழுத வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி உள்ளது.
தேர்தல் கமிஷனுக்கு யார் ஆலோசனை வழங்குகின்றனர், வழிநடத்துகின்றனர் என்பது தெரியாது. ஆனால், அரசியலமைப்பின் கீழ் அமைக்கப்பட்ட அமைப்பு என்பதை மறந்துவிட்டதை போல் தெரிகிறது.
தேர்தல் கமிஷன் அளிக்கும் ஒவ்வொரு பதிலும் தனிப்பட்ட தலைவர்கள் அல்லது கட்சியின் மீதான தாக்குதலாகவே உள்ளன.
நீங்கள் நடுநிலையுடன் செயல்படவில்லை என்பதை வெளிப்படையாகக் காட்ட வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் நோக்கம் எனில், அந்த உணர்வை மிகக் சிறப்பாகவே உருவாக்கி வருகிறீர்கள்.
நீதிபதிகள் தீர்ப்பளிக்கும்போது, வழக்கு தொடுத்த கட்சியை அவதுாறாகவோ, மோசமானவர்களாகவோ சித்தரிப்பது இல்லை. தேர்தல் கமிஷன் இதுபோல கருத்து தெரிவிப்பதை தொடர்ந்தால், அந்த கருத்து களை நீக்குவதற்கு நீதிமன்ற உதவியை நாடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.