தனித்து போட்டி! டில்லி தேர்தலில் காங்.,குடன் கூட்டணியில்லை: ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் அறிவிப்பு
தனித்து போட்டி! டில்லி தேர்தலில் காங்.,குடன் கூட்டணியில்லை: ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் அறிவிப்பு
ADDED : டிச 02, 2024 01:28 AM

புதுடில்லி: ''டில்லி சட்டசபை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி கிடையாது;
ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும்,'' என, முன்னாள் முதல்வரும், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 70 சட்டசபை தொகுதிகளுடைய இங்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தேர்தல் நடக்கிறது.
முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆளும் ஆத் ஆத்மி, தற்போதே தேர்தல்
பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில், எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் முனைப்பு காட்டி வருகிறது. கடந்த மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, காங்கிரசுடன் ஆம் ஆத்மி கூட்டணி வைத்தது. 'இண்டி' கூட்டணியின் அங்கமாக தேர்தலை சந்தித்த காங்., - ஆம் ஆத்மி, படுதோல்வி அடைந்தன. டில்லியின் ஏழு லோக்சபா தொகுதிகளையும் பா.ஜ., கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து, ஹரியானாவில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், தொகுதி பங்கீடு விவகாரத்தில், ஆம் ஆத்மி - காங்., இடையே உடன்பாடுஎட்டப்படவில்லை.
தேர்தலை இரு கட்சிகளும் தனித்தனியாக சந்தித்தன. இது, பா.ஜ.,வின் வெற்றிக்கு வழிவகுத்தது.இந்நிலையில், டில்லியில் முன்னாள் முதல்வரும்,ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான
அரவிந்த் கெஜ்ரிவால், செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், ''அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்கவுள்ளசட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும். காங்கிரசுடன் கூட்டணி இல்லை,'' என்றார்.'
ஹரியானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான காங்., மண்ணைக் கவ்வியது. காங்கிரசில் நிலவும் உட்கட்சி பூசலே தோல்விக்கு காரணம் என, கூறப்படுகிறது.
'டில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் தோற்று விடுவோம் என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் உணர்ந்துள்ளார். இதை கருதியே தனித்து போட்டி என்று அவர் அறிவித்துள்ளார்' என, அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.