சிவாவுக்கு எதிராக காங்., கொந்தளிப்பு; காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு
சிவாவுக்கு எதிராக காங்., கொந்தளிப்பு; காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு
UPDATED : ஜூலை 17, 2025 02:59 PM
ADDED : ஜூலை 17, 2025 01:59 AM

'காமராஜர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தி.மு.க., துணைப் பொதுச்செயலர் சிவா மன்னிப்பு கேட்க வேண்டும்' என, தமிழக காங்கிரசார் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
'காமராஜர் இறக்கும்போது, கருணாநிதி கையை பிடித்து, நீங்கள் தான் ஜனநாயகத்தை காக்க வேண்டும்' என கூறியதாக, சென்னையில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் சிவா பேசி உள்ளார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக மாணவர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிவா பொது வெளியில் தெரிவித்த கருத்துகள், வரலாற்று உண்மைகளையும், அரசியல் மரியாதையையும் முற்றாக மீறியவை.
'ஏசி' இல்லாமல்
காமராஜர் 'ஏசி' இல்லாமல் துாங்க மாட்டார் என்ற குற்றச்சாட்டும், அவர் இறப்பதற்கு முன், கருணாநிதியின் கைகளை பிடித்து, ஜனநாயகத்தை காப்பாற்றச் சொன்னார் என சிவா கூறியதும் உண்மையற்ற கற்பனை.
காமராஜரின் வாழ்க்கை தமிழக அரசியலிலும், இந்திய மக்களின் மனதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரை பற்றி தவறாக பேசுவது, வரலாற்றின் மீதான அவமதிப்பாகவே கருதப்படுகிறது. காமராஜர் குறித்து பொறுப்பில்லாமல் பேசியுள்ள சிவா, உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் அணி துணைத் தலைவர் பழனிவேல் கூறுகையில், ''தமிழக மக்கள் மட்டுமல்ல; நாட்டில் வாழும் அனைத்து மக்கள் நல்வாழ்வுக்காக, தன் வாழ்க்கையை அர்ப்பணித்து, அப்பழுக்கற்ற தலைவராக வாழ்ந்தவர் காமராஜர்.
அவரை கொச்சைப்படுத்துவது போல் பேசிய சிவா, வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், அவரது உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.
தமிழக காங்கிரஸ் பேச்சாளர் திருச்சி வேலுசாமி கூறுகையில், ''மேனாமினுக்கி அரசியல் செய்பவருக்கு, காமராஜரை பற்றி என்ன தெரியும்? காமராஜர் இறப்பதற்கு இரண்டு மாதம் முன், உடல் நலம் பாதிக்கப்பட்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்தார்.
எம்.பி.,யாக்கிய பாவம்
''வீட்டை விட்டு, அவர் எங்கேயும் செல்லவில்லை. அப்படியிருக்கும்போது, சாகும் நிலையில் கருணாநிதியை எப்படி சந்தித்திருக்க முடியும்? நல்ல மனிதர்களை ஒதுக்கி, சிவாவை எம்.பி.,யாக்கிய பாவத்தை, தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
''இனியாவது இப்படி பொய்யாக சரடு விடுவதை, சிவா உள்ளிட்ட தி.மு.க.,வினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இரு தலைவர்களும் தற்போது இல்லை என்பதற்காக, என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.
''அதையும் இந்த தமிழ் சமூகம் நம்பும் என்று நினைத்துக் கொண்டு, இஷ்டத்துக்கு பொய் பேசிக் கொண்டிருந்தால், அதற்கான விளைவுகளை சிவா போன்றவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்,'' என்றார்.
இந்நிலையில், இந்த விஷயத்தை விவாத பொருளாக்க வேண்டாமென சிவா கேட்டுக் கொண்டுள்ளார்.
- நமது நிருபர் -