காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு; தி.மு.க., நிர்வாகிக்கு காங்., கண்டனம்
காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு; தி.மு.க., நிர்வாகிக்கு காங்., கண்டனம்
ADDED : அக் 22, 2024 03:31 AM

காமராஜர் குறித்த தி.மு.க., மாணவர் அணி நிர்வாகி ராஜிவ் காந்தியின் சர்ச்சை பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, 'இது போன்றவர்களை தி.மு.க., பேச அனுமதிக்குமானால், தமிழகத்தில் 'இண்டியா' கூட்டணிக்கு இதைவிட பெரும் கேடு இருக்க முடியாது' என, எச்சரித்துள்ளது.
சமீபத்தில், தி.மு.க., இளைஞரணி அலுவலகத்தில் நடந்த நுால் வெளியீட்டு விழாவில் ராஜிவ் காந்தி பேசுகையில், 'ராஜாஜி மூடிய பள்ளிகளை தான் காமராஜர் திறந்தார். கல்வி கண் திறந்த காமராஜர், தன் சொந்த பணத்தில் பள்ளிகளை திறக்கவில்லை.
எதிரும் புதிருமாக
'காமராஜர் குடியாத்தத்தில் போட்டியிட்டார்; அத்தொகுதியில் காங்கிரஸ் வலுவாக இல்லை. காமராஜர் தோற்று விடக்கூடாது என்பதற்காக, எதிரும் புதிருமாக இருந்த அண்ணாதுரை, தி.மு.க.,வை போட்டியிடாமல் செய்து, ஆதரவு அளித்தார்' என்றார்.
காமராஜர் குறித்த அவரது சர்ச்சை பேச்சு, கூட்டணியில் சலசலப்பை உருவாக்கி உள்ளது.
தமிழக காங்கிரஸ் மூத்த உறுப்பினர் திருச்சி வேலுச்சாமி கூறியதாவது:
ராஜிவ் காந்திக்கு தி.மு.க., காங்கிரஸ் வரலாறு தெரியவில்லை. குடியாத்தம் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லை என அவர் சொல்வது தவறு; பிதற்றல். அத்தொகுதியில் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., தான். அவர் ராஜினாமா செய்து தான் இடைத்தேர்தல் நடந்தது.
மக்கள் வரிப்பணத்தில் தான் காமராஜர் பள்ளிகள் கட்டினார் என்பது எல்லாருக்கும் தெரியும். வரிப்பணத்தை அவர் கொள்ளை அடித்து செல்லவில்லை. ராஜிவ் காந்தியை அடக்கி வைக்கவில்லை என்றால், தி.மு.க., - காங்., இடையேயான உறவில் சிக்கல் ஏற்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி அறிக்கை:
நாம் தமிழர் கட்சியில் ராஜிவ் காந்தி இருந்தபோது, நாக்கில் நரம்பில்லாமல் கருணாநிதியை பற்றி பேசியவர்.
அங்கிருந்து சீமானால் விரட்டப்பட்டு, தி.மு.க.,வில் தஞ்சம் புகுந்தவர் தான் ராஜிவ் காந்தி. அவருடைய பின்புலம் அறிந்தும், தி.மு.க.,வில் அவருக்கு முக்கியத்துவம் ஏன் என்பது புரியவில்லை.
பெரும் கேடு
இத்தகைய மோசமான பின்னணி கொண்ட ஒருவர், காமராஜரை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.
இவரை போன்றவர்கள் இப்படி பேச, தி.மு.க., தலைமை அனுமதிக்குமேயானால், தமிழகத்தில் 'இண்டியா' கூட்டணிக்கு இதை விட பெரும் கேடு இருக்க முடியாது. வரம்பு மீறி பேசிய ராஜிவ் காந்தியை அடக்கி வைப்பது கூட்டணி தர்மத்திற்கு உகந்ததாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -