அரசு துறைகளை கண்காணிக்கும் கார்ப்பரேட் நிபுணர்கள்: புது ரூட்டில் ஆட்சி நடத்தும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு
அரசு துறைகளை கண்காணிக்கும் கார்ப்பரேட் நிபுணர்கள்: புது ரூட்டில் ஆட்சி நடத்தும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு
ADDED : டிச 18, 2025 01:01 AM

நவீன காலத்தில் எல்லாமே கார்ப்பரேட் மயமாகி விட்டது. ஆனால், ஒரு மாநில அரசே கார்ப்பரேட் மயமாகி இருக்கிறது என்றால் நிச்சயம் ஆச்சரியமாகவே இருக்கும்.
தனியார் நிறுவனங்களுக்கு இணையாக அரசு துறைகளையும் வேலை வாங்கும் நோக்கில், கார்ப்பரேட் நிபுணர்களுடன் கைகோர்த்திருப்பது நம் அண்டை மாநிலமான ஆந்திரா தான்.
தெலுங்கு தேசம் தலைவரும், முதல்வருமான சந்திரபாபு நாயுடு தான், இந்த புதுமைக்கு சொந்தக்காரர். அரசு திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா, அமைச்சர்கள் திறம்பட பணியாற்றுகின்றனரா என்பதை கண்காணிக்க, தனியார் ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களை தனித்தனியே பணி அமர்த்தி இருக்கிறார்.
ஆந்திர அரசு இயந்திரம், தற்போது இவர்களது கண்காணிப்பில் தான் பம்பரமாக சுழன்றுக் கொண்டிருக்கிறது. இவர்களது முக்கிய பணியே, அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் திறமைகள், பணிகளை மதிப்பிடுவது தான்.
முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கே வழிகாட்டி வரும் இந்த நிபுணர்கள், ஆந்திர அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசு அதிகாரிகளை உன்னிப்பாக கண்காணித்து வருவதால், அவர்களும் ஒருவித பயத்துடனேயே தங்களது பணியை கவனித்து வருகின்றனர்.
அரசு அமல்படுத்தும் புதிய திட்டங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, பொது அமைதி, சட்டம் - ஒழுங்கு, அரசு துறைகளின் செயல்பாடு, கொள்கை அமலாக்கம் என ஒன்றுவிடாமல் கவனிக்க கள கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒவ்வொரு நாளும் கள நிலவரங்களை ஆராய்ந்து உடனுக்குடன் தகவல் கொடுத்து விடுகின்றனர். இதனால், அரசு நிர்வாகத்தில் பலவீனமான துறைகள் சுலபமாக கண்டறியப்பட்டு, அதை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் துரித கதியில் எடுக்கப்படுகின்றன.
மக்கள் சேவையில் ஏதேனும் முடக்கம் ஏற்பட்டால், உடனடியாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், அவரது மகனுமான நாரா லோகேஷுக்கும் தகவல் பறக்கிறது. மக்கள் கருத்துகளை அறிய நிபுணர்களை நியமிப்பது சந்திரபாபு நாயுடுவுக்கு புதிய விஷயமல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பே, பல்கலை மாணவர்கள் மூலம் சர்வே நடத்திய வரலாறு கொண்டவர்.
தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்ட நிலையில், காலத்திற்கேற்ப அதை கார்ப்பரேட் மயமாக்கிவிட்டார். அவ்வளவு தான். அரசு நிர்வாகம் பற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர் என்ற சமீபத்திய கருத்து கணிப்பு பற்றி, அமைச்சரவை கூட்டத்தில் சந்திரபாபு நாயுடுவே வெளிப்படுத்தினார்.
அதில், அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சரவையின் ஒட்டுமொத்த செயல்பாட்டில் அவருக்கு ஆறாவது இடமே கிடைத்தது தெரியவந்தது. ஜனசேனா கட்சி தலைவரும், துணை முதல்வருமான பவன் கல்யாண், 10வது இடத்தில் இருக்கிறார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் பள்ளிக்கல்வித் துறையை கவனிக்கும் சந்திரபாபுவின் மகன் நாரா லோகேஷ், எட்டாவது இடத்தில் உள்ளார்.
முதலிடம் பிடித்தவர் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகமது பரூக். அடுத்தபடியாக சுற்றுலா துறை அமைச்சர் துர்கேஷ், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சுபாஷ் ஆகியோர் உள்ளனர்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டங்களில் எப்படி பேச வேண்டும், மேடையில் இருக்கைகளின் வரிசை எப்படி இடம்பெற வேண்டும் என்பதை கூட, அவரது தனியார் ஆலோசகர்களே முடிவு செய்கின்றனர்.
மக்களோடு நெருக்கமாக இருப்பதோடு, அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வு கண்டால் மட்டுமே, சிறந்த தலைவராக முடியும். அதை சந்திரபாபு நாயுடு நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்.
- நமது சிறப்பு நிருபர் -

