ராகுல் - பிரியங்கா இடையே சண்டை: 'கொளுத்தி' போடும் மத்திய அமைச்சர்
ராகுல் - பிரியங்கா இடையே சண்டை: 'கொளுத்தி' போடும் மத்திய அமைச்சர்
ADDED : டிச 18, 2025 01:30 AM

புதுடில்லி: ''லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கும், அவரது சகோதரி பிரியங்காவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது,'' என, மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு புது குண்டை போட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இளம் முகமாக ராகுலும், அவரது சகோதரி பிரியங்காவும் அறியப்படுகின்றனர். கேரளாவின் வயநாடு தொகுதியில் சகோதரி பிரியங்காவை நிற்க வைத்து, அவரது வெற்றிக்காக ராகுல் உழைத்தார். அதேபோல், பா.ஜ., தரப்பில் ராகுலுக்கு எதிராக விமர்சனங்கள் எழும்போதெல்லாம், கேடயமாக இருந்து தக்க பதிலடியை பிரியங்கா கொடுத்து வருகிறார்.
ஒற்றுமை
பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் சூழலில், ராகுல் திடீரென ஜெர்மனி புறப்பட்டுச் சென்றது பேசு பொருளானது.
இது தொடர்பாக விமர்சனம் எழுந்த போது கூட, 'ஓராண்டில் பாதிக்கும் மேற்பட்ட நாட்கள் பிரதமர் மோடி வெளிநாடுகளில் இருக்கும்போது, எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் வெளிநாட்டுக்கு செல்லக் கூடாதா' என பிரியங்கா பதிலடி கொடுத்தார். அந்த அளவுக்கு இருவரும் அரசியலில் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், 'ராகுல் வெளிநாட்டிற்கு சென்றதற்கு காரணமே பிரியங்கா தான்' என, மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு புது குண்டை போட்டுள்ளார்.
ஒப்பீடு
இதுகுறித்து அவர் கூறியதாவது: ராகுல், பிரியங்காவுக்கு இடையே தற்போது சண்டை எழுந்துள்ளது. லோக்சபாவில் இருவரது உரைகளையும் ஒப்பிட்டு காங்கிரசார் சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.
கடந்த, 20 ஆண்டு களாக எம்.பி.,யாக உள்ள ராகுலுக்கு இந்த ஒப்பீடு சிறிதும் பிடிக்கவில்லை. இதனால் , குடும்பத்திற்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே தற்போது அவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அமைச்சரான ரவ்நீத் சிங் பிட்டு, கடந்த ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.,வில் இணைந்து தற்போது மத்திய இணை அமைச்சராக உள்ளார்.

