ஒருங்கிணைப்பு செயல்பாடுகளில் அதிருப்தி; பா.ஜ.,வை எதிர்க்க துவங்கிய பன்னீர்செல்வம்
ஒருங்கிணைப்பு செயல்பாடுகளில் அதிருப்தி; பா.ஜ.,வை எதிர்க்க துவங்கிய பன்னீர்செல்வம்
ADDED : டிச 18, 2025 05:16 AM

சென்னை: மத்திய பா.ஜ., அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தற்போது எதிர்க்க துவங்கி உள்ளார்.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை நடத்தி வருகிறார்.
டில்லிக்கு அழைப்பு
கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று, ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். தொடர்ந்து பா.ஜ., தலைமைக்கு விசுவாசமாக இருந்தார். இந்த சூழலில், வரும் சட்டசபை தேர்தலுக்காக அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்தது. கூட்டணியில், பன்னீர்செல்வம் இடம் பெறுவதை பழனிசாமி விரும்பவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த பன்னீர்செல்வம், கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
இதையடுத்து, த.வெ.க., கூட்டணியில் இணைய முடிவு செய்தார். இதை அறிந்த பா.ஜ., தேசிய தலைமை, அவரை டில்லிக்கு வரும்படி அழைத்தது. அங்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பன்னீர்செல்வம் சந்தித்தார்; அப்போது, அ.தி.மு.க.,வில் தன்னையும், தன் ஆதரவாளர்களையும் இணைக்க வலியுறுத்தினார்.
அவரிடம் அமித் ஷா, 'சற்று பொறுமையாக இருங்கள்' என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பா.ஜ., தலைமையும் பழனிசாமியிடம் பேசி உள்ளது. எனினும், இறுதி முடிவு எட்டப்படவில்லை. ஆனால், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், 'அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டால் அதை ஏற்போம்.
'பதிலாக, பா.ஜ.,வுக்கு ஒதுக்கும் இடங்களில் நம்மை நிற்கும்படி கூறினால் ஏற்க வேண்டாம்' என திட்டவட்டமாக கூறி உள்ளனர். இதனால், பன்னீர்செல்வம் குழப்பம் அடைந்து உள்ளார். இதையடுத்து, பா.ஜ.,வை விமர்சிப்பதை தவிர்த்து வந்த பன்னீர்செல்வம், தற்போது எதிர்க்க துவங்கி உள்ளார்.
மத்திய அரசை விமர்சித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு பதிலாக, 'வளர்ச்சி அடைந்த பாரதம், ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்ட மசோதாவை' லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
வெந்த புண்ணில் வேல்
இந்த மசோதாவின்படி, ஒவ்வொரு நிதியாண்டிலும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு, மத்திய அரசு வகுக்கும் வரம்புகளுக்கு உட்பட்டு, மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படும். மக்கள் தொகை, வறுமை ஆகியவற்றின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடும், வேலை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறையும்.
மத்திய நிதி உதவி 60 சதவீதமாக குறைக்கப்பட்டு, மாநிலங்களின் மீது 40 சதவீதம் கூடுதல் நிதி திணிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, நிதி பகிர்வின் வாயிலாக, குறைந்த ஒதுக்கீட்டை பெறும் தமிழகத்துக்கு, இந்த சட்ட மசோதா, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

