தங்கம் திருடியவர்கள் யாரப்பா... அது 'தோழர்கள்' தானே அய்யப்பா! கேரளாவில் காங்கிரசை ஜெயிக்க வைத்த பலே பாடல்
தங்கம் திருடியவர்கள் யாரப்பா... அது 'தோழர்கள்' தானே அய்யப்பா! கேரளாவில் காங்கிரசை ஜெயிக்க வைத்த பலே பாடல்
ADDED : டிச 18, 2025 05:28 AM

கேரளாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இந்தக்கூட்டணி 45 ஆண்டுகளாக கோலோச்சிய திருவனந்தபுரம் மாநகராட்சியை, பா.ஜ., கைப்பற்றிவிட்டது.
விசாரணை
காங்கிரசின் அபார வெற்றிக்கு பின்னால், பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமாக அமைந்தது, தேர்தல் பிரசாரத்தின்போது அக்கட்சியினர் பயன்படுத்திய பிரசார பாடல்தான்!
அந்தப் பாடல் உருவான பின்னணி இதுதான்...
சபரிமலை அய்யப்பன் கோவில் கருவறையின் முன் உள்ள துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்க தகடுகள், 2019ல் பராமரிப்பு பணிக்காக அகற்றப்பட்டன. தங்க முலாம் பூசிய பின், மீண்டும் தங்க தகடுகள் அணிவிக்கப்பட்டபோது, 4 கிலோ அளவுக்கு தங்கம் திருடப்பட்டிருந்தது அம்பலமானது.
இதை தொடர்ந்து பெங்களூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போற்றி, தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசு, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியுமான பத்மகுமார் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில்தான் இந்த ஒட்டுமொத்த கொள்ளையும் நடந்தது. மேலும் சில மார்க்சிஸ்ட் பிரமுகர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளது என விசாரணை நடந்து வருகிறது. இது கேரளாவின் உள்ளாட்சித் தேர்தலில், ஆளுங்கட்சிக்கு எதிராக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதை காங்கிரசும், பா.ஜ.,வும் பிரசார ஆயுதமாக்கின.
இந்த பிரச்னையை மையமாக வைத்து காங்கிரஸ் சார்பில், 'பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' என்ற பிரபல தமிழ் பக்தி பாடல் மெட்டில், ஒரு நையாண்டி பாடல் உருவாக்கப்பட்டது.
குஞ்ஞப்துல்லா என்பவர் எழுதி, ஹனீபா இசையமைத்து, தானிஷ் என்பவர் பாடிய அந்தப் பாடல், முதன்முதலாக காங்., கூட்டணியான முஸ்லிம் லீக்கின் பிரசார கூட்டத்தில் பாடப்பட்டது.
மலையாளத்தில் எழுதப்பட்ட அந்தப் பாடலில், 'போற்றி என்பவரை சபரிமலையில் ஏற்றி, அங்கிருந்த தங்கத்தை பித்தளையாய் மாற்றி விட்டனர்.
'தங்கத்தகடுகளை, சாஸ்தாவின் சொத்தை எடுத்தவர்கள், தங்கம் திருடியவர்கள் யாரப்பா... அது 'தோழர்கள்' தான் அய்யப்பா. ஐதீகங்களை மீற பெண்களை மலையேற்றினர்...' என்பதாக சொல்லப்பட்டுள்ளது.
அய்யப்பனுக்கு சொந்தமான தங்கத்தை கொள்ளையடித்த 'தோழர்களை' குற்றஞ்சாட்டி, அய்யப்ப பக்தர்கள் பாடும் மெட்டில், அதுவும் கார்த்திகை மாதத்தில் பாடப்பட்ட இந்த பாடல் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.
காங்கிரசும் இதை கிராம பஞ்சாயத்துகள் வரை கொண்டு சேர்த்தது. கம்யூனிஸ்டிற்கு ஓட்டளிக்கலாம் என நினைத்திருந்தவர்கள் கூட, இந்த பாடலை கேட்ட பின், அந்த எண்ணத்தை கைவிட்டனர்.
கொண்டாட்டம்
தேர்தல் முடிவு வரும் வரை இதை பெரிதாக கண்டுகொள்ளாத கம்யூ., தோல்வியை சந்தித்த பின், சில இயக்கங்களை வைத்து, இந்த பாட்டிற்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளது. அதில் அய்யப்பனை இழிவுப்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
நேற்று முன்தினம் டில்லி, பார்லிமென்டிற்கு வெளியே கேரளாவின் காங்., - எம்.பி.,க்கள் சேர்ந்து, இந்த பாடலை கோரஸாக பாடி, கேரள உள்ளாட்சி தேர்தல் வெற்றியைக் கொண்டாடினர். கூடவே, சபரிமலை தங்க கொள்ளை தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இது, கேரளா தவிர பிற மாநிலங்களில் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினரை எரிச்சலுக்குள்ளாக்கி உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

