எச்சில் இலை எடுப்பதிலும் காசு பார்க்கும் கவுன்சிலர்கள்: தூய்மை பணியாளர்கள் போராட்டம்
எச்சில் இலை எடுப்பதிலும் காசு பார்க்கும் கவுன்சிலர்கள்: தூய்மை பணியாளர்கள் போராட்டம்
ADDED : ஆக 23, 2025 08:18 AM

மயிலாடுதுறை: எச்சில் இலையிலும் காசு பார்க்கும் நகராட்சி கவுன்சிலர்கள் மீது அதிருப்தியடைந்த துாய்மை பணியாளர்கள் கண்டனம் தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சி எல்லைக்குட்பட்ட 24 வார்டுகளில் 13 திருமண மண்டபங்கள், 50க்கும் மேற்பட்ட சைவ, அசைவ உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
திருமண மண்டபங் களுக்கு வரும் விருந்தினர்கள், ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் உணவு அருந்தி விட்டு போடும் எச்சில் இலைகளை சீர்காழி நகராட்சியில் சொற்ப சம்பளத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் அகற்றிவிட்டு அதற்காக உரிமையாளர்கள் அன்பளிப்பாக அளிக்கும் தொகையை பெற்று அதனை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில், சில வாரங்களாக நகராட்சி கவுன்சிலர்கள் சிலர் திருமண மண்டபங்கள், உணவகங்களில் போடப்படும் எச்சில் இலைகளை தனியே ஊழியர்களை வைத்து அகற்றிவிட்டு தொகையை வசூல் செய்து கொள்வதாக கூறப் படுகிறது. எச்சில் இலைகளை அகற்ற சென்ற துாய்மை பணியாளர்களிடம் கவுன்சிலர்களால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் தகராறு செய்துள்ளனர்.
எச்சில் இலையில் கூட காசு பார்க்கும் நகராட்சி கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நகராட்சி அலுவலகம் முன் அமர்ந்து, ஊழியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த நகராட்சி கமிஷனர் மஞ்சுளா, புகார் அளிக்குமாறு துாய்மை பணியாளர்களிடம் பேச்சு நடத்தி, போராட்டத்தை கைவிட செய்தார்.