ADDED : ஏப் 21, 2024 03:30 AM

காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர், மணீஷ் திவாரி; பஞ்சாபைச் சேர்ந்தவர்; முன்னாள் அமைச்சர். 'காங்கிரசில் மாற்றம் தேவை' என, குலாம் நபி ஆசாத் கூறிய போது, அவருக்கு ஆதரவு அளித்தவர் திவாரி. 'இவர் பா.ஜ.,வில் சேர இருக்கிறார்' என, வதந்தி உலாவியது. இந்நிலையில், சண்டிகர் லோக்சபா தொகுதியின் காங்., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திவாரி. இவருக்கும், சண்டிகர் தொகுதிக்கும் சம்பந்தமே கிடையாது. பஞ்சாபின் லுாதியானா மற்றும் அனந்த்பூரி சாகிப் தொகுதிகளில் போட்டியிட்டவர். அப்படியிருக்க, இவர் எப்படி சண்டிகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்ற குழப்பம் நிலவுகிறது. மேலும் இவருக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் நல்ல உறவும் கிடையாது.
காங்., தலைவர் பவன் குமார் பன்சலுக்கு சீட் கொடுக்கக் கூடாது என்பதால், திவாரிக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர் காங்., தலைவர்கள். 1999லிருந்து தொடர்ந்து மூன்று முறை சண்டிகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பன்சல்; காங்கிரசின் பொருளாளர் பதவி வகித்தவர். ஏன் இவருக்கு சீட் மறுக்கப்பட்டது என தெரியவில்லை.
'முறையாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை என, காங்., கட்சி மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்து உள்ளதுடன், வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், அப்போது கட்சியின் பொருளாளராக இருந்த பவன் பன்சல் தான். இவரால் தான் கட்சிக்கு பிரச்னை. இதனால், இவருக்கு சீட் மறுக்கப்பட்டது' என, காங்., தரப்பில் சொல்லப்படுகிறது. பன்சல் ஆதரவாளர்கள், திவாரிக்கு எதிராக வேலையைத் துவங்கி விட்டனர்.

