2024ம் ஆண்டில் சைபர் குற்றவாளிகள் பொதுமக்களிடம் ரூ.1,674 கோடி மோசடி
2024ம் ஆண்டில் சைபர் குற்றவாளிகள் பொதுமக்களிடம் ரூ.1,674 கோடி மோசடி
ADDED : ஜன 13, 2025 04:00 AM

சென்னை: 'தமிழகத்தில், ஓராண்டில் ஆன்லைன் வாயிலாக, சைபர் குற்றவாளிகள், 1,673.85 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்' என, மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சைபர் குற்றங்கள் தொடர்பாக, கட்டணமில்லா, '1930' என்ற உதவி எண்ணுக்கு, 2024ம் ஆண்டில், 2 லட்சத்து, 68,875 அழைப்புகள் வந்துள்ளன. அவற்றில், 34,392 அழைப்புகள் வாயிலாக நிதி மோசடி குறித்து புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
அதேபோல, www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாக, 1 லட்சத்து 27,065 புகார்கள் பதிவாகி உள்ளன. அவற்றில், 4,326 புகார்கள் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 79,449 புகார்களுக்கு சி.எஸ்.ஆர்., எனப்படும், புகார் மனு ஏற்பு ரசீது வழங்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
தமிழகத்தில், 2024ல், பொதுமக்களிடம் இருந்து, 'ஆன்லைன்' வாயிலாக, சைபர் குற்றவாளிகள், 1,673.85 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். அவற்றில், 771.98 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றவாளிகளிடம் இருந்து, 83.34 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
அதேபோல, சைபர் குற்றவாளிகள், 838 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில், 34 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிச., 6 - 8ம் தேதிகளில், 'திரை நீக்கு' என்ற சிறப்பு நடவடிக்கை வாயிலாக, 76 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆன்லைன் வாயிலாக நடக்கும் மோசடிகளை தடுக்க, சைபர் ரோந்து குழு செயல்பட்டு வருகிறது. 2024ம் ஆண்டு மட்டும் சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட, 19,359 'சிம் கார்டு'கள், 54 இணையதளங்கள், 390 'யூ டியூப்' வீடியோக்கள், 922 'பேஸ்புக்' பதிவுகள் மற்றும் 64 'இன்ஸ்டாகிராம்' பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.
போலி கடன் செயலிகள், சூதாட்ட இணையதளங்களும் அகற்றப்பட்டுள்ளன.
காணாமல் போன மற்றும் திருடப்பட்டது குறித்து, 46,185 மொபைல் போன்கள் கண்டறியப்பட்டு, அவற்றில், 16,296 மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
சைபர் குற்றங்கள் குறித்தும், இணைய பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்துவது தொடர்பாகவும், வரும், 25ம் தேதி, '1930 - சைபர் வாக்கத்தான்' என்ற நிகழ்ச்சி, துணை முதல்வர் உதயநிதி தலைமையில், சென்னை மெரினா கடற்கரையில் நடக்க உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.