வானிலை ஆய்வாளர்களை திணறடித்த 'பெஞ்சல்' புயல்! போக்கு காட்டியதால் கணிக்க தவறியதாக தகவல்
வானிலை ஆய்வாளர்களை திணறடித்த 'பெஞ்சல்' புயல்! போக்கு காட்டியதால் கணிக்க தவறியதாக தகவல்
ADDED : டிச 04, 2024 05:18 AM

சென்னை: எப்போதும் இல்லாத வகையில், இந்த முறை உருவான, 'பெஞ்சல்' புயலின் போக்கு குறித்து, துல்லியமாககணிக்க முடியாத நிலை ஏற் பட்டதாக, வானிலை ஆய் வாளர்கள் தெரிவித்தனர்.
பொதுவாக வடகிழக்கு பருவமழை காலங்களில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். அது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தமிழக கடலோர பகுதியை நெருங்கும். கரையை கடக்காமல் நிலை கொண்டிருக்கும் போது, கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்.இதில் சில ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் புயலாக உருவெடுக்கும். அவை, தமிழக கடலோர மாவட் டங்களில், ஏதேனும் ஒரு பகுதியில் கரையை கடக்கும் அல்லது ஆந்திரா, ஒடிசா மாநிலங்கள் நோக்கி செல்லும். இதற்கு மாறாக, 'பெஞ்சல்' புயல் ஆரம்பம் முதல், வானிலை துறை அதிகாரிகளை திணறடித்தது.
பெரும்பாலும், வங்கக்கடலில் வடகிழக்கு பருவமழை காலத்தில், பூமத்திய ரேகைக்கு வடக்கில் தான், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இப்படி உருவாகும் நிகழ்வுகள், அதை சுற்றி ஏற்படும் காற்றின் போக்குக்கு ஏற்ப, ஏதேனும் ஒரு திசையை நோக்கி நகரும்.கடந்த நவம்பர் 25ல் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, பூமத்திய ரேகையை ஒட்டிய, இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியிலேயே பயணித்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியான பின்னும், அதே பகுதியில் பயணித்ததால், நகர்வுகள் குறித்த கணிப்புகளில் சிக்கல் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் பூமத்திய ரேகை பகுதியில் இருந்து, முழுமையாக வங்கக்கடலில் பயணிக்கும் போது, இலங்கையை நெருங்கிய நிலையில், நிலத்துடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால், வலுவிழக்கும் நிலைக்கு சென்றது.அதன்பின், நிலப் பகுதியில் இருந்து விலகி, மீண்டும் கிழக்கு நோக்கி பயணித்தது. அடுத்து வடமேற்கு திசையில், தமிழகம் நோக்கி நகர துவங்கியது. புயலாக உருவான பின், அதிக அளவில் திசை மாற்றங்கள் இருக்காது என்ற வானிலை துறையின் கணிப்பை பொய்யாக்கியது.
இந்த அமைப்பு புயலாக மாறுமா என்பதிலும் தாமதம் ஏற்பட்டது; அதன்பின், 30ம் தேதி புயலாக கரையை கடக்குமா என்பதை முடிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது.இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:
கடந்த, 26, 27ம் தேதிகளில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த போது, காற்று குவிதலில் பிரச்னை ஏற்பட்டது. இதன்பின், மேற்கில் இருந்து வீசிய காற்றுகாரணமாக வலுவடைந்தது. அங்கிருந்து வடமேற்கில் பயணித்தது. அதன்பின், மேற்கில் பயணிக்க துவங்கிய புயல், தென்மேற்காக நகர்ந்து கரையை கடந்தது.இதன் அடிப்படையில், பெஞ்சல் புயலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து, துல்லியமாக ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு கூறினார்.
'விழிபிதுங்க வைத்துவிட்டது'
அண்ணா பல்கலை காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மைய பேராசிரியர் ஆ.ராமச்சந்திரன் கூறியதாவது: சமீப காலமாக வங்கக்கடலில் ஏற்படும் நிகழ்வுகள், கணிப்பதற்கு மிகவும் சவாலாக அமைந்துள்ளன. குறிப்பாக வடகிழக்கு பருவமழை காலத்தில், 200 ஆய்வாளர்கள் வங்கக் கடல் மாற்றங்களை கண்காணிப்பதில் ஈடுபடுகின்றனர்.
பூமத்திய ரேகைக்கு மிக நெருக்கமாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள், இதற்கு கூறப்பட்டாலும், இங்கு உருவாகும் புயல்களை கணிப்பது சவாலாக உள்ளது. பொதுவாக, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் புயலாக மாறினால், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட திசையில் பயணித்து, கரையை கடந்து விடும்; பின் வலுவிழந்து விடும்.
ஆனால், பெஞ்சல் புயலின் போக்கு, வானிலை ஆய்வு துறையையும், ஆராய்ச்சியாளர்களையும் விழி பிதுங்க வைத்துவிட்டது.
பொதுவாக, புயலின் ஐந்து மணி நேர நகர்வுகள் கணிக்கப்படும். ஆனால், பெஞ்சல் புயலில், மூன்று மணி நேர நகர்வுகளை கூட துல்லியமாக கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. வடமேற்கில் சென்று, தமிழக கரையை கடக்கும் என்று எதிர்பார்த்த சமயத்தில், மேற்கு, தென்மேற்கில் திசை மாறியது.
கரையை கடந்த பின்னும் வலுவிழக்காமல், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில், அதிகனமழையை கொடுத்துள்ளது.
கரையை கடந்த பின் வலுவிழக்காமல், எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பதை, கணிக்க முடியாமல் போய் விட்டது. அதே நேரம், 21 செ.மீ.,க்கு மேல் அதி கனமழை இருக்கும் என்ற எச்சரிக்கையை, உட்புற பகுதிகளில் இருப்பவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுவே பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு காரணம்.
வரும் காலங்களில், வங்கக்கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்து, பொது மக்களும், அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.