சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு துாக்கு; திருநெல்வேலி போக்சோ கோர்ட் தீர்ப்பு
சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு துாக்கு; திருநெல்வேலி போக்சோ கோர்ட் தீர்ப்பு
UPDATED : டிச 25, 2025 06:55 AM
ADDED : டிச 25, 2025 06:06 AM

திருநெல்வேலி: நெருங்கிய உறவு சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய தொழிலாளிக்கு துாக்குத்தண்டனை விதித்து நெல்லை 'போக்சசோ ' நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த கூலி தொழிலாளி பால் இசக்கி, 47. இவரது நெருங்கிய சொந்தக்கார, 14 வயது சிறுமி பால்இசக்கியின் பராமரிப்பில் உள்ளார். 8 மாதங்களுக்கு முன் அந்த சிறுமியை பால்இசக்கி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததில் கர்ப்பமானார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, போக்சோ சட்டத்தின் கீழ், பால் இசக்கியை கைது செய்தார்.
இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது.
போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள், மருத்துவ அறிக்கைகள் பாலியல் வன்கொடுமை செய்ததை உறுதி செய்தன. நேற்று நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார்.
'சிறுமியை பாதுகாக்க வேண்டிய நபரே அவளை சிதைத்தது மன்னிக்க முடியாத மிகப்பெரிய குற்றம்' எனக் கூறி பால்இசக்கிக்கு துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.

