தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலர் நியமிக்க முடிவு; நிர்வாகிகள் எதிர்ப்புக்கு பணியாத திருமாவளவன்
தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலர் நியமிக்க முடிவு; நிர்வாகிகள் எதிர்ப்புக்கு பணியாத திருமாவளவன்
ADDED : ஏப் 23, 2025 04:47 AM

சென்னை : சட்டசபை தொகுதிகள் வாரியாக, 234 மாவட்டச் செயலர்கள் மற்றும் மேலிடப் பொறுப்பாளர்கள் நியமிக்க, வி.சி., தலைமை எடுத்த முடிவுக்கு, மாவட்டச் செயலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை அசோக் நகரில் உள்ள, வி.சி., கட்சி தலைமை அலுவலகத்தில், மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன், அக்கட்சி தலைவர் திருமாவளவன், நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கட்சியில் சீரமைப்பு பணி நடக்க உள்ளது. தற்போது, 144 மாவட்டச் செயலர்கள் இருக்கும் நிலையில், நீங்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும், கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படுகிறது. எனவே, சட்டசபை தொகுதி வாரியாக, மாவட்டச் செயலர்கள் நியமிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 234 மாவட்ட செயலர்கள், அவர்களுக்கு மேலிட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர். கட்சி வளர்ச்சியை முன்னிறுத்தி, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபனை மற்றும் கருத்துகள் இருந்தால் தெரிவிக்கலாம் என, கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலர்கள் பேசினர். அவர்களில் சிலர், 'மாநில நிர்வாகிகள் எங்களை மதிப்பதில்லை. கட்சியை பலப்படுத்தும் வகையில், நிர்வாகிகளிடம் ஒற்றுமை இல்லை. மாவட்டச் செயலர்களுக்கு, மேலிடப் பொறுப்பாளர்கள் நியமிப்பதை கைவிட வேண்டும். இல்லையெனில், நாங்கள் மாவட்டச் செயலராக தொடர விரும்பவில்லை.
சட்டசபை தொகுதிவாரியாக மாவட்டச் செயலர்கள் நியமிப்பதை, 2026 சட்டசபை தேர்தல் வரை நிறுத்தி வைக்க வேண்டும். தற்போது உள்ள, 144 மாவட்டச் செயலர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து, கட்சி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்களை நீக்கும் முடிவை, தலைவர் எடுக்கலாம்' என தெரிவித்தனர்.
ஆனால், சட்டசபை தொகுதிவாரியாக, மாவட்டச் செயலர்கள் நியமிப்பது உறுதி என, திருமாவளவன் தெரிவித்தார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மாலை மாநில நிர்வாகிகளுடன், தி.மு.க., கூட்டணி குறித்தும், தேர்தலில் எத்தனை தொகுதிகள் கேட்பது என்பது குறித்தும், மாநில நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்.