UPDATED : பிப் 17, 2024 09:12 AM
ADDED : பிப் 17, 2024 02:28 AM

சுற்றுச்சுழல் தாக்கம் மதிப்பீடு ஆணையம், அனுமதி அளிப்பதில் தாமதம் செய்வதால், 60 குவாரிகள் மூடப்பட்டன. இதனால் ஜல்லிகள், எம்.சாண்ட் மணல் விலை உயர்ந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 90க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. அங்கு பாறைகளை வெடி வைத்து உடைத்து, கிரஷர்களுக்கு அனுப்புகின்றனர். அங்கு ஜல்லிகள், எம்.சாண்ட் உற்பத்தி செய்து அரசு கட்டுமானம், சாலை பணி மட்டுமின்றி மக்களுக்கும் விற்கின்றனர்.
பழைய குவாரிகளுக்கு, 5 ஆண்டு, புது குவாரிகளுக்கு, 10 ஆண்டு என, குத்தகைக்கு விடப்படுகிறது. 5 ஆண்டு முடிந்தபின், 15க்கும் மேற்பட்ட அரசு துறைகளிடம் தடையில்லா சான்றிதழ் பெற்று குவாரி உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். அதற்கு சென்னையில் உள்ள, 'சுற்றுச்சுழல் தாக்கம் மதிப்பீடு ஆணையம்' அனுமதி அளிக்கும். பின், மாசு கட்டுப்பாட்டு துறையிடம் அனுமதி பெற்று குவாரிகள் இயங்கும்.
சேலம் மாவட்டத்தில், 5 ஆண்டு முடிந்த குவாரிகள், அதன் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அனுமதி கிடைக்க தாமதம் ஏற்பட்டு வருவதால் குவாரிகளின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக குவாரிகள் மூடப்பட்டதால், கிரஷர்களுக்கு பாறை வரத்து குறைந்துள்ளது.
ஏற்கனவே குத்தகை காலத்தில் உடைத்து இருப்பு வைக்கப்பட்ட பாறைகளை வைத்து கிரஷர்கள் இயங்கி வருகின்றன. இன்னும் சில நாட்களில் பாறை இல்லாமல் கிரஷர்கள் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.
மேலும் குவாரிகள் மூடலால், கடந்த, 1ல், ஒரு யுனிட் பி.சாண்ட், 4,500ல் இருந்து, 5,000 ரூபாயாகவும், எம்.சாண்ட், 3,500ல் இருந்து, 4,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. அதேபோல், 53 எம்.எம்., 40 எம்.எம்., 20 எம்.எம்., 12 எம்.எம்., 6 எம்.எம்., ஆகிய ஜல்லிகள், 2,500ல் இருந்து தலா, 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
பவுடர், 2,500ல் இருந்து, 3,500 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டது. 6 மாதங்களில் இருமுறை ஜல்லிகள், எம்.சாண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தவிர குவாரி பணியாளர்களை தொடர்ந்து, கட்டுமான தொழிலாளர்கள், சரக்கு வாகன தொழிலாளர்கள், ஹலோ பிளாக் கல், சிமென்ட் செங்கல் தயாரிப்பு தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும்.
எளிமைப்படுத்தப்படுமா
சேலம் மாவட்ட கிரஷர், ஜல்லி உற்பத்தியாளர் நலச்சங்கத்தினர் கூறியதாவது: அனுமதி வழங்க காலம் கடத்துவதால் சேலத்தில், 60 குவாரிகள் மூடப்பட்டன. 33 குவாரிகள் மட்டும் செயல்படுகின்றன. அதன் அனுமதிக்கு சுற்றுச்சுழல் உள்பட, 15க்கும் மேற்பட்ட அரசு துறைகளிடம் சான்றிதழ் பெறவும், சுற்றுச்சுழல் தாக்கம் மதிப்பீடு ஆணையத்தில் விண்ணப்பித்து அனுமதி பெறவும், 2 முதல், 3 ஆண்டுகளாகிறது.
பெரிய தொகையை வங்கியில் கடன் பெற்று குவாரி, கிரஷர் நடத்துகிறோம். அனுமதி பெற தாமதம் ஏற்படுவதால் தொழிலாளர்களுக்கு கூலி, இயந்திரங்கள் பராமரிப்பு, வங்கி தவணை செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. குவாரி இயங்காததால் அரசுக்கும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர்.
லட்சக்கணக்கில் இருந்தகுவாரி ஏல தொகையை கோடிக்கணக்கில் உயர்த்தி விட்டனர். அரசுக்கு செலுத்த வேண்டிய, 'ராயல்டி' தொகை பல மடங்கு உயர்ந்துவிட்டது. பாறையை, 1 சதுர செ.மீ.,க்கு வெட்டி எடுக்க கட்டணம், 59ல் இருந்து, 90 ரூபாயாக உயர்த்திவிட்டனர். வணிக வரித்துறையினர், சட்டத்தை மீறி நெருக்கடி கொடுக்கின்றனர். இத்தொழிலை கைவிடும் சூழலில் உள்ளோம்.
டீசல், மின் கட்டணம், கிரஷர் உதிரி பாக விலைகள் அதிகரித்துவிட்டன. இதனால், எம்.சாண்ட், ஜல்லி விலையை உயர்த்த வேண்டியுள்ளது. பக்கத்து மாநிலத்தில், 30 ஆண்டு குத்தகைக்கு விடுகின்றனர். அதேபோல் தமிழகத்தில் விட வேண்டும். கால விரயம் ஏற்படாமல் குவாரிகளுக்கு எளிமையாக அனுமதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.