வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தயாரிப்பு வடிவமைப்பு காரணமாக தாமதம்?: ரயில்வே அமைச்சர் மறுப்பு
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தயாரிப்பு வடிவமைப்பு காரணமாக தாமதம்?: ரயில்வே அமைச்சர் மறுப்பு
ADDED : நவ 30, 2024 01:14 AM

புதுடில்லி: வடிவமைப்பு அனுமதி கிடைக்காததால், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தயாரிப்பில் தாமதம் நீடிப்பதாக ஊடகங்களில் வெளியான தகவலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக மறுத்தார்.
நாட்டின் பல்வேறு நகரங்ளுக்கு இடையே, 100க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணியர் உட்கார்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயில்கள், மணிக்கு 120 கி.மீ., வேகத்துக்கு மேல் பயணிக்கின்றன.
இந்த ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, 'ஸ்லீப்பர்' எனப்படும், துாங்கும் வசதியுடைய, வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணியில், ரயில்வே நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை தயாரிக்க, ரஷ்யாவின் மாஸ்கோவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'டிரான்ஸ்மாஷ்ஹோல்டிங்' என்ற ரயில் போக்குவரத்து நிறுவனத்துடன், நம் ரயில்வே துறை ஒப்பந்தம் போட்டுஉள்ளது.
ஸ்லீப்பர் ரயில் பெட்டியில் கழிப்பறை, கேன்டீன் அமைக்க, டிரான்ஸ்மாஷ்ஹோல்டிங் நிறுவனத்திடம் நம் ரயில்வே அமைச்சகம் கோரியதாகவும், இதனால், தயாரிப்பு துவங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும், சமீபத்தில் செய்தி வெளியானது.
மேலும், ரயில்வே அமைச்சகத்தின் கோரிக்கையின்படி, ஸ்லீப்பர் ரயிலின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்து அனுப்பப்பட்டதாகவும், இதற்கு அமைச்சகத்திடம் இருந்து பதில் வரவில்லை என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் கூறுவது என்ன? ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறியதாவது:
ஆறு அல்லது எட்டு பெட்டிகளுக்கு மேல் உள்ள ரயில் பெட்டியை தயாரிப்பதில், டிரான்ஸ்மாஷ்ஹோல்டிங் நிறுவனத்துக்கு அனுபவம் இல்லை.
ரஷ்யாவில் குறைந்த மக்கள் தொகை இருப்பதால், அங்கு ஆறு அல்லது எட்டு பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்படுகிறது.
நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம் இருப்பதால், 16 அல்லது 24 பெட்டிகள் கொண்ட ரயில் தேவை.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் வடிவமைப்பு மாதிரியை நாங்கள் தருகிறோம் என்றும், அதன்படி ரயில் பெட்டியை தயாரிக்க வேண்டும் என்றும், டிரான்ஸ்மாஷ்ஹோல்டிங் நிறுவனத்திடம் ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும், 16 அல்லது 20 அல்லது 24 என்ற எண்ணிக்கையில் ரயில் பெட்டிகளை தயாரிக்க வேண்டும் என, தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறு. ரயில் பெட்டி தயாரிப்பு பணிகளை, டிரான்ஸ்மாஷ்ஹோல்டிங் நிறுவனம் விரைவில் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.