ADDED : அக் 13, 2024 03:19 AM

ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி குறித்து விவாதிக்க, காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. ஆளுக்கு ஒரு காரணம் சொல்ல, சிலரோ, 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தான் காரணம்' என கூறினராம்.
எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த ராகுல், ஒரு கட்டத்தில் கோபமாக, 'இத்தனை மாதங்கள் நான் கஷ்டப்பட்டதற்கு பலன் இல்லை. ஹரியானா காங்., தலைவர்களின் சுயநலமே இதற்கு காரணம்.
அவர்கள், தங்கள் சுயநலத்தைப் பார்த்தனரே அன்றி, கட்சியின் வருங்காலத்தை குறித்து கவலைப்படவில்லை. மின்னணு இயந்திரங்கள் குறித்து, எனக்கு முழு அறிக்கை வேண்டும்' என சொல்லி விட்டு, கோபத்துடன் வெளியே சென்று விட்டாராம்.
இந்த விவகாரம் ஊடகங்களில் கசிய, 'இதெல்லாம் பொய்... அப்படி எதுவுமே நடக்கவில்லை' என, காங்., செய்தி தொடர்பாளர்கள் மறுப்பு தெரிவித்தனர். ஆனால், 'ராகுல் கோபப்பட்டது உண்மை' என, அடித்து சொல்கின்றனர் சில சீனியர் காங்., தலைவர்கள்.
இதற்கிடையே, காங்கிரசின் சீனியர் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றி, காஷ்மீரில் தனிக்கட்சி ஆரம்பித்து போட்டியிட்டு தோற்ற குலாம் நபி ஆசாத், ஒரு சீனியர் காங்., தலைவரிடம், 'ஜெய்ராம் ரமேஷ் உட்பட பல காங்கிரசார், சமூகவலைதளத்திலேயே கட்சியை வளர்த்து விடலாம் என, நினைக்கின்றனர்; ஆனால், களத்தில் இறங்கி வேலை செய்ய எவரும் முன் வருவதில்லை.
'பா.ஜ., தோல்வி அடைந்தால், அதற்கு என்ன உண்மையான காரணம் என அலசி, அதை போக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் எப்போதுமே மின்னணு ஓட்டு இயந்திரத்தை குறை சொல்வதில்லை; இதை பார்த்து காங்கிரசார் கற்றுக் கொள்ள வேண்டும்' என்றாராம்.
'மின்னணு இயந்திரம் குறித்து என்ன ரிப்போர்ட் தருவது?' என, காங்., தலைவர்கள் குழம்பி உள்ளனராம். 'விரைவில், தோல்விக்கு காரணமான ஹரியானா காங்., தலைவர்கள் மீது நடவடிக்கை பாயும்' என, சொல்லப்படுகிறது.
'காங்., பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் தான், ஹரியானாவில், 'சீட்' ஒதுக்கீடு செய்வதற்கு முழு அத்தாரிட்டி. இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?' என்றால், 'நடவடிக்கையாவது மண்ணாவது... ராகுலுக்கு நெருக்கமானவர் வேணுகோபால்; வழக்கம் போல, வேறு சில தலைகள் உருளும். உண்மையாக, யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அவர் ஜாலியாக இருப்பார்; இதுதான் காங்கிரஸ் மாடல்' என வருத்தப்படுகின்றனர் சீனியர்கள்.
லோக்சபா தேர்தலுக்கு பின், உச்சத்தில் இருந்த ராகுல், ஹரியானா தேர்தலுக்கு பின், அதள பாதாளத்தில் விழுந்து விட்டார்.