டில்லி உஷ்ஷ்ஷ்: கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறார்?
டில்லி உஷ்ஷ்ஷ்: கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறார்?
ADDED : செப் 29, 2024 02:22 AM

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வர் சித்தாராமையா ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்; இவரது மனைவி பார்வதிக்கு, 56 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் ஒதுக்கிய விவகாரத்தில், சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய, கவர்னர் அனுமதி அளித்து விட்டார். இதை எதிர்த்து, உயர்நீதிமன்றம் சென்றார் சித்தராமையா; ஆனால், வழக்கை ரத்து செய்யவோ, தடை செய்யவோ நீதிமன்றம் மறுத்து விட்டது.
இது, கர்நாடக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ராகுலும் கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளார். ஆனால், கர்நாடக காங்கிரஸ் சித்தராமையாவிற்கு முழு ஆதரவு அளித்து வருகிறது. துணை முதல்வர் சிவகுமாருக்கு முதல்வர் பதவி மீது ஆசை; ஆனால், கட்சியோ சித்தராமையாவை முதல்வராக்கி விட்டது. இருப்பினும், கட்சித்தலைமை சொல்படி, சித்தராமையாவை ஆதரித்து வருகிறார் சிவகுமார்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி வருகிறார் மோடி. ஹரியானா தேர்தல் பிரசாரத்தில் சித்தராமையா விவகாரத்தை எடுத்துச் சொல்லி, 'காங்., என்றாலே ஊழல். காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டாம்' என, பேசி வருகிறார் மோடி. இதற்கு பதில் சொல்ல முடியாமல், திணறி வருகிறது காங்கிரஸ்.
சித்தராமையா மீது இப்போது நடவடிக்கை எடுத்தால், ஹரியானா மற்றும் காஷ்மீர் சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என்பதால், கட்சித்தலைமை பொறுமையோடு உள்ளதாம்.
'வரும், அக்., 8ல் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். அதன்பின்,சித்தரமையா மாற்றப்படலாம்' என, சொல்லப்படுகிறது. சித்தாரமையாவை எதிர்த்து இருப்பவர், துணை முதல்வர் சிவகுமார். 'முதல்வர் மனைவி குறித்த அனைத்து ஆவணங்களையும் பா.ஜ.,விடம் கொடுத்ததே சிவகுமார் தான்' எனவும் பேசப்படுகிறது.