ADDED : நவ 03, 2024 12:44 AM

மும்பை: பொதுவாக பலர் ஜோதிடம், நியூமராலஜி என, பல விஷயங்களை நம்புவர். அரசியலிலும், சினிமாவிலும் இது அதிகமாக புழங்குகிறது. மஹாராஷ்டிரா அரசியலை, 9ம் நம்பர் அரசாள்கிறது என, சொன்னால் நம்புவீர்களா? இங்கு, 9ம் நம்பர் உச்சத்தில் உள்ளது. வேட்பாளர் பட்டியலோ, கார் நம்பரோ எதுவானாலும் கூட்டுத்தொகை 9 வர வேண்டும்.
பா.ஜ., தன் முதல் வேட்பாளர் பட்டியலில், 99 வேட்பாளர்களை வெளியிட்டது. இதன் கூட்டணியான சிவசேனா -ஷிண்டே கட்சி, தன் முதல் பட்டியலில், 45 வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டது. சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் உறவினர் ராஜ் தாக்கரே, மஹாராஷ்டிரா நவ் நிர்மாண் சேனா என்கிற கட்சியை நடத்துகிறார்; இவர் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலிலும், 45 பேர்.
இந்த 9ம் நம்பர் விவகாரம் மஹாராஷ்டிராவில் துவங்கியது இன்று நேற்றல்ல... 40 ஆண்டுகளுக்கு முன் பால் தாக்கரேவின் சிவசேனாவும், பா.ஜ.,வும் கூட்டணி அமைத்த போது, இந்த 9ம் நம்பர் ராசி ஆரம்பித்தது.
மஹாராஷ்டிராவில் 288 சட்டசபை தொகுதிகள். இதில் 168ல் சிவசேனாவும், 120ல் பா.ஜ.,வும் போட்டியிடுவதாக ஒப்பந்தம்; ஆனால் தாக்கரே இதை மாற்றினார். 'சிவசேனா 171லும் பா.ஜ., 117லும் போட்டியிடும்' என, ஒப்பந்தம் மாற்றப்பட்டது. எல்லாம் இந்த 9ம் நம்பர் ராசி தான்.
இதைவிட ஒருபடி மேலே போய்விட்டார் மஹாராஷ்டிரா நவ் நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே. இவர் கட்சி துவங்கியது, 9ம் தேதி; இவரது அரசியல் நிகழ்ச்சிகள் அனைத்தும் 9ம் தேதி அல்லது கூட்டுத்தொகை 9ல் வரும் நாளில் தான் நடத்தப்படுகின்றன.