ADDED : செப் 01, 2024 01:34 AM

புதுடில்லி: பிரதமர் மோடி, சமீபத்தில் ரஷ்யா சென்று வந்தார். அதைத் தொடர்ந்து, உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்தார். 'இந்த இரு நாடுகளுக்கும், இரண்டு ஆண்டிற்கும் மேலாக போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மோடி இங்கு சென்றது மிக முக்கியத்துவம் வாய்ந்தது' என, சொல்லப்படுகிறது.
உக்ரைன் அதிபரிடம் மோடி என்ன பேசினார் என தெரிந்து கொள்ள, அனைத்து நாடுகளின் துாதர்களும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேள்வி கேட்டு துளைத்து விட்டனராம். போதாக்குறைக்கு, உக்ரைன் சென்று வந்த பின், ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோருடன் தொலைபேசியில் பேசி உள்ளார் மோடி.
இதையடுத்து, டில்லியின் அதிகார வட்டாரங்களில் ஒரு விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது. 'உக்ரைன் துாதரும், ரஷ்யாவின் துாதரும் துபாயிலோ அல்லது லண்டனிலோ ரகசியமாக சந்தித்து பேச வாய்ப்புள்ளது. இந்த சந்திப்பின் போது, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இருப்பார். இதற்கான பூர்வாங்க வேலைகளைத்தான் மோடி இந்த சந்திப்பின் போது செய்துள்ளார்' என்கின்றனர்.
இந்த ரகசிய சந்திப்பை அடுத்து, மோடி இரண்டு அதிபர்களிடமும் பேசுவார். இந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டால், அமெரிக்க அதிபர் பைடனும், ரஷ்ய அதிபர் புடினும் பேசுவர். அடுத்து, உக்ரைன் - -ரஷ்ய போர் நிறுத்தப்படும். இந்தாண்டு இறுதியில் இதற்கான வாய்ப்புள்ளதாம். ஒரு வேளை அப்படி நடந்தால், மோடியின் புகழ் உலக அரங்கில் எங்கோ போய்விடும்.